வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (29/11/2018)

கடைசி தொடர்பு:08:20 (29/11/2018)

விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள் - எதிர்பார்ப்பின் உச்சத்தில் கிரிக்கெட் உலகக் கோப்பை #WC2019

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான பெரும்பலான டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டன என்றும் இன்னும் மீதம் வெறும் 3,500 டிக்கெட்கள் மட்டுமே இருக்கின்றன என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய அணி


ஐ.சி.சி-யின் விளம்பரப் பிரிவு ஜெனரல் மேனேஜர் கம்பெல் ஜெய்மிசன், ``இங்கிலாந்தில் 2019 மே மாதம் 30-ம் தேதி முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் மொத்தமாக 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இன்னும் மிச்சம் 3,500 டிக்கெட்டுகள் மட்டுமே இருக்கின்றன என நான் நினைக்கிறேன். உலகக் கோப்பை போட்டிகள் மீது மற்ற ஆண்டுகளைவிட இந்தமுறை அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகிறது” என ஐ.சி.சி-யும் இந்தியன் பியர் கம்பெனியான பிரா 91-யுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அறிவித்தபின் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். 

மேலும், ``இந்தியா பாகிஸ்தானுடன் ஓல்டு ட்ராஃபொர்டில் ஜூன் 16-ல் மோதுகிறது. இந்தப் போட்டி உட்பட இந்தியா விளையாடவுள்ள அனைத்துப் போட்டிகளுக்குமான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன” என்றார்.

மே 30-ல் ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் இங்கிலாந்தும் தென் ஆப்பிரிக்காவும் மோதவுள்ளன. இறுதிப்போட்டி ஜூலை 14-ல் லார்ட்ஸில் நடக்கவுள்ளது.