வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (29/11/2018)

கடைசி தொடர்பு:16:40 (29/11/2018)

`என் வாழ்வின் கறுப்பு நாள்!’ - மிதாலி ராஜ் உருக்கம்

மிதாலி ராஜ்

இந்திய மகளிர் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில், இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. லீக் போட்டிகளில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, 7 வருடங்களுக்குப் பிறகு அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அரையிறுதியில், இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது மேலும், லீக் சுற்றில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்தால், இறுதிப்போட்டிக்கு நுழைந்துவிடும் என ரசிகர்கள் நினைத்திருந்தனர். இந்தப் போட்டியில், அனுபவமிக்க வீராங்கனை மிதாலி ராஜ் நீக்கப்பட்டார். முதலில் விளையாடிய இந்திய அணி, 112 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி 18 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில், மிதாலி நீக்கம் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இதுகுறித்து விமர்சனங்களும் எழுந்தன. `அணியின் நலனுக்காகத்தான் இந்த முடிவு' என  கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், விளக்கமளித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மிதாலி தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன். கிரிக்கெட்மீது நான் கொண்ட ஈடுபாடும், நாட்டுக்காக 20 ஆண்டுகள் வியர்வை சிந்தி உழைத்த கடின உழைப்பும் வீணானது. என் தேசப்பற்றை சந்தேகித்துள்ளனர். என் திறமை கேள்விக்குள்ளாகியுள்ளது. இது, என் வாழ்வில் கறுப்பு நாள், கடவுள்தான் எனக்கு வலிமையைக் கொடுக்க வேண்டும்” என்று தன் வேதனையைப் பதிவிட்டுள்ளார்.