வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (30/11/2018)

கடைசி தொடர்பு:17:40 (30/11/2018)

`ஆஸ்திரேலியாதான் வெற்றிபெறும்; ஆனா... காரணம் மட்டும் கேக்காதீங்க!’ - இயான் சேப்பல் #AUSvIND

`இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிதான் வெற்றிபெறும் என நான் கணிக்கிறேன். ஆனால், அதற்கான காரணத்தை மட்டும் என்னிடம் கேட்காதீர்கள்’ என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் சேப்பல் கூறியிருக்கிறார். 

இயான் சேப்பல்

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. பெரும்பாலான கிரிக்கெட் விமர்சகர்களும் இந்திய அணியே தொடரை வெல்லும் என்று கணித்து வருகிறார்கள். இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார் இயான் சேப்பல். 

இஎஸ்பிஎன் க்ரிக்இன்ஃபோ இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெல்லும் என நினைக்கிறேன். அதற்கான காரணமெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். சொல்லக்கூடிய காரணமாக நான் நினைப்பது, இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடிய விதம்தான். அந்தத் தொடரை இந்திய அணி வென்றிருக்க வேண்டும். இந்திய அணி, தற்போதைய ஆஸ்திரேலிய அணியை வெல்லும் திறமை படைத்ததுதான். ஆனால், ஏதோ ஒன்று குறைவதாக நான் நினைக்கிறேன்’’ என்று தெரிவித்தார். 

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களைப் பாராட்டிய அவர்,``சொந்த மண்ணில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்பது ஏற்கெனெவே நமக்குத் தெரியும். ஆனால், இந்தியப் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு ஆஸ்திரேலிய மண்ணில் அவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை. ஆஸ்திரேலிய அணியை நான் தேர்வு செய்வதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறலாம். அதேபோல், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எப்படிக் கையாள்வார் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்’’ என்றார்.