வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (30/11/2018)

கடைசி தொடர்பு:21:30 (30/11/2018)

விருதுகளின் நாயகன் அபினவ் பிந்த்ராவுக்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம்!

துப்பாக்கிசுடுதல் வீரரான அபினவ் பிந்த்ராவுக்கு உயரிய விருதாகக் கருதப்படும் 'ப்ளூ கிராஸ்' விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார் அவர்.

அபினவ் பிந்த்ரா


இதற்கு மேல் வாங்க விருதுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இருக்கின்ற எல்லா உயரிய விருதுகளையும் வாங்கிக் குவித்தவர் அபினவ் பிந்த்ரா. கடந்த 2008-ம் ஆண்டு, பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ரைஃபில் துப்பாக்கிசுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை தேடித்தந்தவர். இந்தியாவுக்காக முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத்தந்தவர் என்பதால், நாடே அவரை கொண்டாடியது.  2000-ம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்பட்டது.

2009-ம் ஆண்டு, பத்மபூஷண் விருது என இப்படி நீள்கிறது அவரின் விருதுப் பட்டியல். 2016-ம் ஆண்டு நடைபெற்ற  ரியோ ஒலிம்பிக் போட்டியில், 4-வது இடத்துக்கு முன்னேறிய அவர், வெற்றிக்கு அருகே சென்று பதக்கத்தைத் தவறவிட்டார். இதோடு சேர்த்து, தன் ஓய்வுக்கான அறிவிப்பையும் வெளியிட்டார் அபினவ். இது, அவரின் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஓய்வுபெற்ற பிறகும் விருதுகள் அவரைத் தேடிக்கொண்டேயிருக்கின்றன. அந்த வகையில், சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் கூட்டமைப்பு சார்பில், துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது, 'ப்ளூ கிராஸ்' . சர்வதேச அளவில் துப்பாக்கிசுடுதலில் சிறந்த பங்களிப்பை அளித்த வீரர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படும் இந்த விருது, அபினவ் பிந்த்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.