வெளியிடப்பட்ட நேரம்: 04:45 (01/12/2018)

கடைசி தொடர்பு:07:32 (01/12/2018)

``இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு விரைவில் புதிய பயிற்சியாளர்!” - பி.சி.சி.ஐ அதிரடி

இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பத்தைத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கச் சொல்லிக் கேட்டுள்ளது. தற்போது பயிற்சியாளராக இருக்கும் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நவம்பர் 30 -ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. அவரின் பதிவிக்காலத்தை நீட்டிப்புச் செய்ய வாய்ப்பில்லை என்று கூறிய கிரிக்கெட் வாரியம் புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.  

பிசிசிஐ -ரமேஷ் பவார்


``இந்திய கிரிக்கெட் வாரியம்  இந்திய மகளிர் அணிக்கான தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்” என்று அதன் அலுவலக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

பயிற்சி முறையில் மூத்த வீராங்கனைகளுக்கும் முன்னாள் பயிற்சியாளர் துசர் ஆரோதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கிரிக்கெட் வாரியம் அவரைப் பதவியிலிருந்து நீக்கியது. அவரைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ரமேஷ் பவாரைத் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் அமர்த்தியது. ரமேஷ் பவார் தலைமையில் உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற இந்திய மகளிர் டி-20 அணித் தலைவி ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் இந்திய மகளிர் ஒருநாள் போட்டியின் தலைவி மிதாலி ராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதுமட்டுமல்ல அந்த டி-20 தொடரில் மூத்த கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜுக்கும் ரமேஷ் பவாருக்கும் இடையே வீரர்களைத் தேர்வு செய்வதில் கருத்து முரண்பாடு நிலவி வந்தது. மிதாலி ராஜ் இந்திய மகளிர் அணியில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். அதுமட்டுமல்ல இந்திய ஒருநாள் மகளிர் கிரிக்கெட் அணித் தலைவியாகவும் நீடித்து வருகிறார். நடந்துமுடிந்த 2018 உலகக் கோப்பை டி-20 போட்டியிலும் தொடர்ந்து இரண்டு அரை சதங்கள் அடித்து நல்ல ஃபார்மிலிருந்தார். ஆனால், உடல் தகுதியைக் காரணமாகக் காட்டி இங்கிலாந்து அணியுடனான அரையிறுதியில் மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை. அந்தப் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியைப் பதிவு செய்தது. இதனால் கேப்டன் கவுர் மற்றும் பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மிதாலி ராஜும் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தனக்கு இடையூறு ஏற்படுத்துவதன் மூலம் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் திட்டமிட்டுள்ளார் என்று வாரியத்துக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். 

இதைத் தொடர்ந்து புதன்கிழமை இந்தச் சர்ச்சைகளுக்குத் தன் பக்கக் கருத்தை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருந்தார் ரமேஷ் பவார். இந்தச் சர்ச்சைகள் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பம் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.