வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (01/12/2018)

கடைசி தொடர்பு:07:12 (01/12/2018)

``டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம்!” - அடுத்த இலக்கு குறித்து மேரி கோம்

ஆறு முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் 2020-ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வெல்வதே தனது அடுத்த குறிக்கோள் என்று கூறியுள்ளார்.

மேரி கோம்

48 கிலோ எடைப்பிரிவில் உலகப் பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் ஆறு முறை தங்கம் வென்றதன்மூலம் தன்னுடைய பெயரை வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டார் மேரி கோம்.

மணிப்பூரைச் சேர்ந்த மேரி மூன்று குழந்தைகளுக்குத் தாய். எட்டு ஆண்டுகள் விளையாட்டுக்கு இடைவெளி விட்டு போட்டியில் கலந்துகொண்டாலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பழங்குடிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ``மூன்று குழந்தைகளுக்குத் தாயாக எனக்குப் பல கடமைகள் இருந்தாலும் மீண்டும் உலகச் சாம்பியன் ஆவதே என்னுடைய கனவாக இருந்தது. அதற்காகக் கடுமையாக உழைத்த நான் இப்போது ஆறாவது முறையாக இந்தியாவுக்காகத் தங்கம் வென்றுள்ளேன்” எனப் பெருமை பொங்கப் பேசியுள்ளார்.

``பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்து அரசும் என்னுடைய கடமையை இன்னும் அதிகமாக்கியுள்ளது. ஆனாலும் நான் பயிற்சி செய்வதை எப்போதும் குறைத்துக்கொண்டதே கிடையாது. ஏழாவது முறையாக, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இப்போது என்னுடைய அடுத்த குறிக்கோள்” என்றும் பேசியுள்ளார்.

48 கிலோ எடைப்பிரிவில் தற்போது விளையாடி வரும் மேரி கோம் 2020 ஒலிம்பிக்கில் 51 கிலோ எடைப்பிரிவிலேயே விளையாடவுள்ளார். ஏனென்றால் ஒலிம்பிக்கில் 48 கிலோ எடையினருக்கான குத்துச் சண்டைப் போட்டி இல்லை. 2012 ஒலிம்பிக்கில் மேரி கோம் வெண்கலம் வென்றதும் 51 கிலோ எடைப் பிரிவில்தான்.

36 வயதான மேரி கோம் விரைவில் தன்னுடைய ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தபோது ``நான் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடவுள்ளேன்” என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.