வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (01/12/2018)

கடைசி தொடர்பு:07:51 (01/12/2018)

``யாரிடமும் பேசவில்லை; காயம் அவரை அதிகம் பாதித்துள்ளது” - ப்ரித்வி ஷா குறித்து அஷ்வின்

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து டெஸ்ட் தொடர் வரும் 6 -ம் தேதி தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக இந்திய அணி தற்போது பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடி வருகிறது. 

ப்ரித்வி ஷா

Photo: Twitter/BCCI


சிட்னியில் நடைபெற்று வரும் இந்தப் பயிற்சிப் போட்டியில் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாம் நாளில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 66 ரன்கள் எடுத்தார். மேலும், புஜாரா, கோலி, ரஹானே மற்றும் ஹனும விகாரி ஆகியோர் அரை சதம் அடித்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது. 

இந்த நிலையில், இந்தப் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷாவுக்கு ஃபீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை, மைதானத்திலிருந்து  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காலில் ஏற்பட்ட காயத்துக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் பின்னர் முதலாவது டெஸ்ட் போட்டியில் ப்ரித்வி விளையாடமாட்டார் என பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஆஸ்திரேலியத் தொடருக்கு முன்னதாக உள்நாட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷா அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய தொடருக்கும் தேர்வானார் இந்த 19 வயது இளம் வீரர். ஆனால், காயம் காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போனதில், ப்ரித்வி ஷா வருத்தத்தில் இருக்கிறார். காயத்துக்குப் பின்னர் யாரிடமும் ஷா அதிகமாகப் பேசவில்லை என்கிறார் அஷ்வின். 

இது தொடர்பாக அஷ்வின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ``ப்ரித்வி ஷாவுக்கு காலில் கொஞ்சம் வீக்கம் உள்ளது. அவருக்குக் காயம் ஏற்பட்டது சற்று மோசமான ஒன்றுதான். இளம் வீரரான அவர், இந்திய அணிக்காக விளையாட முதல்முறையாக ஆஸ்திரேலியா வந்திருக்கிறார். நிச்சயம் இது அவருக்குக் கடினமான ஒன்றாகத்தான் இருக்கும். இந்த காயத்துக்குப் பின்னர் அவர் சக வீரர்களிடம் அதிகமாகப் பேசவில்லை. அமைதியாக இருக்கிறார். முதல் போட்டியில் அவர் ஆடாதது இந்திய அணிக்கு இழப்பா என்று கேட்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. ஒருவர் இல்லை என்றால் மற்றொருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அவ்ளோ தான்” என்றார். 

ப்ரித்வி ஷா இல்லாத நிலையில், ராகுலுடன் முரளி விஜய் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது பார்த்திவ் படேல் களமிறக்கப்படலாம். மற்றொரு இளம் வீரரான ஹனும விகாரி, கேப்டன் கோலி தன்னை ஓப்பனிங்கில் களமிறங்கச் சொல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆடுகளத்தின் தன்மை, வீரர்களின் செயல்பாடு முதலியவை கொண்டு பிளேயிங் லெவன் தேர்வு செய்யப்படும்.