``இதயம் நொறுங்கிவிட்டது; எங்கிருந்தாலும் உன்னைக் கண்டுபிடிப்பேன்!" - எச்சரித்த மெக்கல்லம் | Nathan McCullum fake news spread and McCullum reacts

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (01/12/2018)

கடைசி தொடர்பு:22:07 (01/12/2018)

``இதயம் நொறுங்கிவிட்டது; எங்கிருந்தாலும் உன்னைக் கண்டுபிடிப்பேன்!" - எச்சரித்த மெக்கல்லம்

நியூஸிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நாதன் மெக்கல்லம் தொடர்பாக வதந்தி பரப்பியவர்களுக்கு ப்ரண்டன் மெக்கல்லம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

மெக்கல்லம்

நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாதன் மெக்கல்லம், அந்த அணியின் முன்னாள் கேப்டன் ப்ரண்டன் மெக்கல்லமின் மூத்த சகோதரர் ஆவார். நாதன், சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நியூஸிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளிலும் புனே வாரியர்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.  சுழற்பந்துவீச்சாளரான இவர், பின் வரிசையில் பேட்டிங்கிலும் கை கொடுத்துள்ளார்.  38 வயதான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியிருந்தார். 

இந்நிலையில், இன்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவியது. அதில்,  ``நியூஸிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நாதன் மெக்கல்லம். இவர், சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர், இன்று மாலை காலமாகிவிட்டார். இந்தத் தகவலை அவரது மனைவி தெரிவித்துள்ளார்” என்ற செய்தி பரவியது. இது வேகமாகப் பரவ, பல ஊடகங்களில் பிரேக்கிங் செய்தி ஆனது. விக்கிபீடியாவிலும் அவர் இறந்துவிட்டதாகப் பதிவேற்றப்பட்டது. 

ட்வீட்

அவரது மரணத்துக்கான காரணம் தெரியாமல் அனைவரும் தேடிக்கொண்டிருக்க, நாதன் மெக்கல்லமே இது தொடர்பாக ட்விட்டரில் ட்வீட் செய்தார்.  ``நான் உயிருடன் இருக்கிறேன். முன்பைவிட நன்றாகவே இருக்கிறேன். வெளியாகும் தகவல்கள் உண்மை அல்ல. எங்கிருந்து இந்தச் செய்தி பரவியது எனத் தெரியவில்லை. லவ் யூ ஆல்” என்று பதிவிட்டிருந்தார். 

ட்விட்டர்

இதனால், மெக்கல்லம்குறித்துப் பரவிய வதந்திக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், நாதன் மெக்கல்லமின் சகோதரரான ப்ரண்டன் மெக்கல்லம், கடும் கோபத்துடன் ட்வீட் செய்திருந்தார். அதில் அவர்,  ``சிலர் சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே எனது சகோதரர் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர். நான் நியூஸிலாந்துக்கு விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். இந்தத் தகவல் கேட்டு, எனது இதயம் நொறுங்கிவிட்டது. வந்த தகவல்கள் உண்மையானது அல்ல. இதை யார் பதிவிட்டிருந்தாலும், எங்கிருந்தாலும், எப்படியாவது உன்னைக் கண்டுபிடிப்பேன்” என்று அதிரடியாகப் பதிவிட்டிருந்தார். 

இந்தத் தகவல் வதந்தி என்று நிரூபிக்கப்பட்டாலும், இதற்குக் காரணமான நபர் யார் என்று இன்னும் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. 


[X] Close

[X] Close