வெளியிடப்பட்ட நேரம்: 07:52 (02/12/2018)

கடைசி தொடர்பு:07:52 (02/12/2018)

இந்திய பெண்கள் அணியின் புதிய பயிற்சியாளர் - தேர்வு செய்யும் சச்சின், கங்குலி, லட்சுமண் காம்போ?

இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் தேர்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய தலைமைப் பயிற்சியாளரை தேர்வு செய்யும் வாய்ப்பு சச்சின், கங்குலி, லட்சுமண் அடங்கிய குழுவுக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. 

சச்சின், லட்சுமன், கங்குலி

இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பத்தைத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கச் சொல்லிக் கேட்டிருந்தது.  பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 30 -ம் தேதியுடன் முடிவடைந்தது. அவரின் பதிவிக்காலத்தை நீட்டிப்புச் செய்ய வாய்ப்பில்லை என்று கூறிய கிரிக்கெட் வாரியம் புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.  இதற்குக் கடந்த உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்வி மற்றும் வீராங்கனைகளுடனான மோதல் போக்கும் காரணமாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விண்ணப்பங்களைப் பெற்றப் பின்னர் அடுத்தகட்ட பணிகள் நடைபெறும். இந்நிலையில் பிசிசிஐ யின் நிர்வாகக் குழு, ஆலோசனைக் குழுவை பெண்கள் அணிக்கான பயிற்சியாளரை தேர்ந்தெடுக்குப்படி கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின், கங்குலி, லட்சுமன் ஆகியோர் அடங்கிய குழு தான் கிரிக்கெட் ஆலோசனைக் குழு. 

இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்பிளே மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரை இந்தக் குழு தேர்ந்தெடுத்தது. ஆனால், அதன் பின்னர், இந்தக் குழு பெரிதாக இயங்கவில்லை. இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ ஒரு பெண் பயிற்சியாளரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.