முதல்முறையாக இன்னிங்ஸ் வெற்றி! - வெஸ்ட் இண்டீஸ் தொடரை முழுமையாக வென்ற வங்கதேசம் #BANvWI | Mehidy Hasan is the star as Bangladesh complete their biggest win in Test history

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (02/12/2018)

கடைசி தொடர்பு:21:30 (02/12/2018)

முதல்முறையாக இன்னிங்ஸ் வெற்றி! - வெஸ்ட் இண்டீஸ் தொடரை முழுமையாக வென்ற வங்கதேசம் #BANvWI

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

வங்கதேச அணி வீரர் மெஹ்தி ஹசன்

Photo Credit: ICC 

மிர்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 508 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் மகமதுல்லா 136 ரன்கள் எடுத்தார். அதேபோல், கேப்டன் ஷகிப் அல் ஹசன் (80), தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் (76) மற்றும் லின்டன் தாஸ் (54) ஆகியோர் அரைசதங்கள் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேமர் ரோச், பிஷூ, பிராத்வெயிட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேச சுழற்பந்துவீச்சில் தடுமாறியது. குறிப்பாக மெஹ்தி ஹசன் பந்துவீச்சை எதிர்க்கொள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தடுமாறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 36.4 ஓவர்களில் 111 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் 3 வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்னைத் தாண்டவில்லை. வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சாளர் மெஹ்தி ஹசன், 58 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

வெற்றிக் களிப்பில் வங்கதேச அணி வீரர்கள்

Photo Credit: ICC 

இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 397 ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேச அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே கேப்டன் பிராத்வொயிட் ஆட்டமிழந்து வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், அந்த அணி 59.2 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹெட்மெயர் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய மெஹ்தி ஹசன், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

112 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வங்கதேச அணி, டெஸ்ட் வரலாற்றில் முதல்முறையாக இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. முதல் டெஸ்டில் 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்த வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.    


[X] Close

[X] Close