`ஒரு சர்வதேச அணியை வழிநடத்தும் முறை கிரேக் சேப்பலுக்குத் தெரியவில்லை!’ - வி.வி.எஸ். லட்சுமணன் | VVS Laxman slams former coach creg chappel in his book

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (02/12/2018)

கடைசி தொடர்பு:19:30 (02/12/2018)

`ஒரு சர்வதேச அணியை வழிநடத்தும் முறை கிரேக் சேப்பலுக்குத் தெரியவில்லை!’ - வி.வி.எஸ். லட்சுமணன்

சர்வதேச கிரிக்கெட் அணியை எப்படி நடத்த வேண்டும் என்பது கிரேக் சேப்பலுக்குத் தெரியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணன் தெரிவித்திருக்கிறார். 

புத்தக வெளியீட்டு விழாவில் சச்சினுடன் லட்சுமணன்

இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கிரேக் சேப்பல் கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் முதல் 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பதவி வகித்தார். அவர் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும், வீரர்களுடன் அவர் மோதல் போக்கைக் கடைபிடித்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின. 

இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன், `281 அண்ட் பியாண்ட்’ (281 And Beyond) என்ற தனது சுயசரிதையில் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பலைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். கிரிக்கெட் எழுத்தாளர் ஆர்.கௌசிக் உடன் இணைந்து அவர் எழுதியுள்ள அந்த புத்தகத்தில், சிறுவயது முதல் சர்வதேச கிரிக்கெட் வீரரானது வரையிலான பல்வேறு காலகட்டங்கள் குறித்து லட்சுமணன் எழுதியிருக்கிறார். 

லட்சுமணனின் சுயசரிதை


கிரேக் சேப்பல் குறித்து அந்தப் புத்தகத்தில், ``இந்திய அணியின் பயிற்சியாளராக கிரேக் சேப்பல் இருந்த காலகட்டம் சோதனையானது. அவர் வீரர்களுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிக்கவில்லை. அதேபோல், ஒரு சர்வதேச அணியை எப்படி வழிநடத்துவது என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. மைதானத்தில் விளையாடி வெற்றிதேடித் தரும் வீரர்களே, பெரிய ஸ்டார்கள்; மாறாக பயிற்சியாளர்கள் அல்ல என்பதை அவர் அவ்வப்போது மறந்துவிடுவதுண்டு. 

அவர் இந்தியா வந்தபோது நல்ல எண்ணத்துடன், உதவும் நோக்கத்துடன் வந்தார். ஆனால், அவர் செல்லும்போது இந்திய அணியை சுக்குநூறாக்கிவிட்டு சென்றார். என்னுடைய கரியரின் மோசமான காலகட்டங்களில் முக்கியமான இடம் அவருக்கு உண்டு. போட்டிகளின் முடிவுகள் அவரின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை உணர்த்தின. ஆனால், அவை எதையுமே அவர் உணர்ந்ததில்லை. ஒரு பேட்ஸ்மேனாக கிரேக் சேப்பல் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால், ஒரு பயிற்சியாளராக அப்படி என்னால் கூற இயலாது’’ என்று லட்சுமணன் குறிப்பிட்டிருக்கிறார்.
 


[X] Close

[X] Close