வெளியிடப்பட்ட நேரம்: 07:10 (03/12/2018)

கடைசி தொடர்பு:07:32 (03/12/2018)

உலகக்கோப்பை ஹாக்கி - இந்தியா பெல்ஜியம் இடையேயான ஆட்டம் ட்ரா!

உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா பெல்ஜியம் அணிகளுக்கிடையேயான போட்டி 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

ஹாக்கி

14-வது உலகக்கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி, ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவையும், பெல்ஜியம் முதல் ஆட்டத்தில் கனடாவையும் வெற்றிகொண்டிருந்தன.  இந்நிலையில் நேற்று,  சி பிரிவில் உள்ள   இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்திலே இரு அணிகளும் தாக்குதல் பாணியைக் கடைப்பிடித்தன. பெல்ஜியம் அணி, பந்தை தனது கட்டுபாட்டிலே வைத்திருந்ததது.  பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹெண்ட்ரிக்ஸ் பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தித் தனது முதல் கோலை பதிவுசெய்தார்.

முதல் பாதி முடியும் வரை இரு அணிகளும் கோல் போடாததால், பெல்ஜியம் 1-0 என முன்னிலைபெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் 39-வது நிமிடத்திலும், சிம்ரன் ஜித் சிங் 47-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். இதனால் இந்தியா 2-1 என முன்னிலைபெற்றது. ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.  58-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் சைமன் குக்னார்ட் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனானது. இறுதிவரை பதில் கோல் அடிக்க இரண்டு அணிகளும் முயன்றன. கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில், இந்திய வீரர் வருண்குமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.