வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (03/12/2018)

கடைசி தொடர்பு:16:30 (03/12/2018)

தோனி ஐடியாவில் உருவான ஸ்போர்ட்ஸ் ஆப் `ரன் ஆடம்..!’ என்ன ஸ்பெஷல்?!

தோனி ஐடியாவில் உருவான ஸ்போர்ட்ஸ் ஆப் `ரன் ஆடம்..!’ என்ன ஸ்பெஷல்?!

ணையதளத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்தவர்கள் இந்த ஸ்டார்ட்அப் காரர்கள். தமிழகத்தைச் சேர்ந்த ஏரகச்செல்வன் இணையத்தைப் பயன்படுத்தி விளையாட்டு வீரர்களை இணைக்கிறார். ஏரகச்செல்வனும் 68 பேர் கொண்ட அவரது டீமும் `ரன் ஆடம்’ என்ற புது செயலியை உருவாக்கியிருக்கிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் போல செயல்படும் இந்தச் செயலியில் விளையாட்டு ஆர்வம் உள்ள உள்ளவர்களைத் தவிர வேறு யாரையுமே பார்க்கமுடியாதாம். சரி, ஸ்போர்ட்ஸ் சார்ந்த ஸ்டார்ட்-அப் பல இருக்கும்போது `ரன் ஆடம்’ ஏன் ஸ்பெஷல் என்ற கேள்விக்கு பதில், இந்த நிறுவனத்தின் 25 சதவிகித பங்குதாராக மாறியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி.

ரன் ஆடம் எடுத்த பயிற்சி வகுப்பு

`ரன் ஆடம்’ நிறுவனத்தின் இயக்குநர் ஏரகச்செல்வன் ஈரோடு அருகே இருக்கும் சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர். ``ஸ்போர்ட்ஸ் சார்ந்த எல்லா விஷயங்களையும் இணைக்கிற ஒரு எக்கோசிஸ்டம்தான் இந்தச் செயலி. உங்ககிட்ட ஒரு வென்யூ இருக்கலாம், நீங்க ஒரு கோச்சா இருக்கலாம், இல்லை ஒரு விளையாட்டு வீரரா இருக்கலாம், முன்னாள் விளையாட்டு வீரரா இருக்கலாம், இந்தியாவில் விளையாட்டுத் துறை வளரணும்னு ஆசைப்படுற ஒரு தொழிலதிபரா இருக்கலாம்... நீங்க இங்க வந்தா உங்களுக்குத் தேவையானது கிடைக்கும். இது ஃபேஸ்புக் மாதிரிதான். உங்க தேவையை இங்கே பதிவுபண்ணா இன்ட்ரஸ்ட் இருக்கவங்க அதைப் பூர்த்தி செய்வாங்க. உங்க தேவைகள் கண்டுக்கப்படலைன்னா, இந்த ஐடியாவுக்குப் பின்னாடி இருக்க நாங்களே அதை நிறைவேற்றுவோம்” என்கிறார் ஏரகச்செல்வன். 

Run Adam app

``இதைப் பயன்படுத்தி, 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தயாராகிவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று அத்லெட்டுகளுக்கு திருநெல்வேலியில் இருக்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து சப்ளிமென்ட்ஸ் வாங்க ஸ்பான்சர்ஷிப் வாங்கிக் கொடுத்துள்ளோம். இது எங்களுக்குப் பெரிய விஷயம். இதேபோல பல திறமையான விளையாட்டு வீரர்களுக்கு என்ன தேவையோ அதெல்லாம் கிடைத்தால் இந்தியாவுக்கு மெடல் கிடைக்கும். அரசு உதவி இருந்தாலும் இல்லையென்றாலும் கூட்டு முயற்சியால் நாமே விளையாட்டு வீரர்களை வளர்த்தெடுக்கலாம்’’ என்பது ஏரகச்செல்வன் கருத்து.

எக்கோசிஸ்டம்

``ரன் ஆடம் மூலமா இப்போ பல விளையாட்டுப் போட்டிகளையும், இன்டர்நேஷனல் கோச், பிளேயர்களை வச்சு பயிற்சி வகுப்புகளையும் நாங்களே நடத்திட்டு வரோம். இதுமட்டுமல்லாமல் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் பல அத்லெட்டிக் நேஷனல் மீட்களை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் லைவ் பண்ணிட்டு இருக்கோம்.’’

பயிற்சி வகுப்பு

`ரன் ஆடம்’ ஆப் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. 2016-ல் தோனியிடம் இந்த ஐடியாவைச் சொன்னபோது அவர் ஐடியாவை மட்டும் ஏற்றுக்கொண்டு அந்த ஆப்பில் இருந்த பல விஷயங்களை மாற்றிவிட்டாராம். ``எங்களுக்கு ஸ்போர்ட்ஸ் என்னானுன்னுதான் தெரியும். ஒரு கேப்டனா அவருக்குத்தான் அடிமட்டத்திலிருந்து எப்படி வரணும்னு தெரியும். எங்களோட ஐடியாவை எடுத்துக்கிட்டு அவரும் எங்ககூட சேர்ந்து இந்த ஆப்பை பில்ட் பண்ணார். அவர் கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன் படி ஆப்பை வடிவமைக்க ஒன்றரை வருஷம் ஆச்சு. இப்போ நீங்க `ரன் ஆடம்’ உள்ள போனா விஸ்வநாதன் ஆனந்த், தீபா கர்மகர், சரத் கமல்னு பிரபலமான பல விளையாட்டு வீரர்கள் இருக்காங்க. ஒரு அத்தெலட்டுக்குத் தேவையான எல்லா வசதியையும் எங்க செயலி மூலமா வாங்கிக் கொடுத்து பல திறமையானவர்களை கொண்டுவரணும்’’ - நம்பிக்கையோடு முடிக்கிறார் ஏரகச்செல்வன்.


டிரெண்டிங் @ விகடன்