வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (03/12/2018)

கடைசி தொடர்பு:19:08 (03/12/2018)

`கபில் டு கோலி!’ - இந்தியக் கிரிக்கெட்டைக் கொண்டாடும் பிராட்மேன் மியூசியம்

இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராட்மேன் மியூசியம் கெளரவம் செய்துள்ளது. இந்திய சுற்றுப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக கபில் டு கோலி என்ற கண்காட்சியும் நடத்துகிறது. 

கோலி

சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி முன்னணி வீரராக வலம் வருகிறார். கிரிக்கெட் சாதனைகள் ஒவ்வொன்றாக முறியடித்து வரும் அவர், தற்போது புதிய கெளரவத்தைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிரிக்கெட் உலகின் `டான்' பிரான்மேன் மியூசியம் கோலிக்கு இந்தப் புதிய கெளரவத்தை வழங்கியுள்ளது. 

கபில் டூ கோலி

கோலிக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நிறையவே தொடர்பு உள்ளது. அனைத்து வெளிநாட்டு மண்ணிலும் கோலி சாதித்திருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை ஆஸ்திரேலியாவில் 2012 -ம் ஆண்டின் சுற்றுப்பயணத்தின்போது அடிலெய்டு மைதானத்தில் அடித்தார். 2014-15-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தின்போது கோலி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடினார். 

சச்சின் படம்

அந்தத் தொடரில், சிட்னி மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதன் நினைவாகக் கையெழுத்திட்ட தனது ஜெர்சியை வழங்கியிருந்தார். தற்போது இந்த ஜெர்சி, பிராட்மேன் மியூசியத்தில், சச்சினின் படத்துக்கு அடுத்துக் காட்சிப்படுத்தப்படவுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த மியூசியத்தில் ஒரு கிரிக்கெட் வீரரின் பெயரோ, படமோ இடம் பெறுவது பெருமையாகக் கருதப்படும்.

சச்சின்

தற்போது இந்திய அணி ஆஸ்திரேலிவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், அதைக் கொண்டாடும் விதமாக இந்த மியூசியத்தில், `கபில் டு கோலி' என்ற பெயரில் கண்காட்சி ஒன்று நடத்தப்படுகிறது. இது தொடர்பாக மியூசியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ``இந்திய அணியின் சுற்றுப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்திய துணைக் கண்டம் கிரிக்கெட்டுக்கு அளித்துள்ள பங்கு மிக அதிகம். இந்தக் கண்காட்சி நேற்று (டிசம்பர் 2) தொடங்கி பிப்ரவரி 28 வரை நடைபெறவுள்ளது. இதில் சச்சினின் புதிய படம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. அதன் அருகில் கோலியின் ஜெர்சியும் வைக்கப்படவுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

கெளரவமிக்க இந்த மியூசியத்தில் கபில் டு கோலி கண்காட்சியில் கோலியின் ஜெர்சி, சச்சினின் புதிய படம் இடம்பெற, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 6-ம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.