வெளியிடப்பட்ட நேரம்: 22:26 (03/12/2018)

கடைசி தொடர்பு:22:44 (03/12/2018)

`அஷ்வின் பந்துவீச்சு வேற லெவல்ல இருக்கும்; கொஞ்சம் வெயிட் பண்ணிப் பாருங்க!’ - புஜாரா

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் பந்துவீச்சு குறித்து புஜாரா கருத்து தெரிவித்துள்ளார். 

அஷ்வின்

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடர் முடிவடைந்த நிலையில் வரும் 6-ம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா மட்டுமல்லாது உலகம் முடிவதும் எதிர்பார்க்கும் தொடராக இந்தத் தொடர் உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் பிராட்மேன் மியூசியத்தில் இந்தத் தொடரைக் கொண்டாடும் விதமாக கபில் டு கோலி என்ற தலைப்பில் கண்காட்சி நடத்தப்படுகிறது. 

இந்திய வீரர்கள் தற்போது வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இந்தியா மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடின. மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு 544 ரன்கள் குவித்தது. இதனால், இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாட இன்னும் தயாராகவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. 

புஜாரா

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வீரர் புஜாரா, ``பயிற்சி ஆட்டம் குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை. பயிற்சி ஆட்டத்தில் 500 ரன்களுக்கு மேல் கொடுத்தது ஒரு விஷயமே இல்லை. ஆஸ்திரேலியாவில் எப்படிப் பந்துவீச வேண்டும் என்று எங்கள் பந்துவீச்சாளர்களுக்குத் தெரியும்” என்றார். 

இன்றைய தினம் அஷ்வின் மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் பயிற்சியில் ஈடுபடவில்லை. இவர்கள் இருவரும் முதல்போட்டியில் விளையாடுவார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த புஜாரா, ``வீரர்கள் பணிச்சுமை தொடர்பாகக் கண்காணிக்கப்படுகிறது. முக்கிய போட்டிக்கு முன்னர் ஓய்வும் கட்டாயம் தேவை. அதன் அடிப்படையில் சில முடிவுகள் எடுக்கப்படும்” என்றார். 

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் அஷ்வின். டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 25.44. ஆஸ்திரேலிய மண்ணில் அவரது சராசரி 54.71. தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் அவர் பந்துவீச சிரமப்படுகிறார். இந்தத் தொடருக்கு அவர் எப்படித் தயாராகியுள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த புஜாரா,  ``அவர் தனது பந்துவீச்சில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். சமீபத்தில் அவரது பந்துவீச்சை கவனித்தால், இந்த மாற்றம் தெரியும். இதைச் சொல்வது கடினம். ஆனால், அவரது பந்துவீச்சில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் நிச்சயம் அவருக்கு இந்தத் தொடரில் உதவும்” என்றார்.