வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (04/12/2018)

கடைசி தொடர்பு:08:30 (04/12/2018)

"ரமேஷ் பவாரே பயிற்சியாளராகத் தொடர வேண்டும்” - ஹர்மன்பிரீத் பிசிசிஐ-க்கு கடிதம்!

சமீபகாலமாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பைகளை வெல்ல முடியாவிட்டாலும், கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்துள்ளனர். ஆனால் எவர் கண்பட்டதோ, சீனியர் மற்றும் ஜூனியர் வீராங்கனைகளுக்கு இடையே மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது.

ஹர்மன்

டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. கடும் அதிருப்தியடைந்த மிதாலி, “தலைமைப் பயிற்சியாளர் ரமேஷ் பவார் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்” என்று குற்றம் சாட்டினார். இந்தச் சூழலில், ரமேஷ் பவாரின் ஒப்பந்தக் காலம் நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. அவர் இடத்துக்கு வேறு சிலரின் பெயர்களை பிசிசிஐ பரிசீலித்துவருகிறது. இந்த நிலையில்,”தலைமைப் பயிற்சியாளராக ரமேஷ் பவாரே தொடர வேண்டும்” என்று வலியுறுத்தி, டி20 அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பிசிசிஐ-க்கு தனித்தனியாகக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

மிதாலி

 

 ஹர்மன் பிரீத் எழுதியுள்ள கடிதத்தில் , “ரமேஷ் பவார், இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் முகத்தை மாற்றிக்காட்டியிருக்கிறார். அடுத்தடுத்து பல தொடர்கள் வரவிருக்கும் நிலையில், அவரின் பங்களிப்பு அணிக்கு அவசியம். பவார் பயிற்சியாளராக நீடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அதே கடிதத்தில், மிதாலி ராஜை நீக்கியதற்கான காரணத்தையும் ஹர்மன் பட்டியலிட்டுள்ளார். ”மிதாலி ராஜின் கடந்தகால செயல்பாடுகளைவைத்தே அந்த முடிவு எடுக்கப்பட்டது. அது என்னுடைய தனிப்பட்ட முடிவல்ல. பயிற்சியாளர் மற்றும் தேர்வாளருடன் ஆலோசித்தே அந்த முடிவை எடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

ரமேஷ் பவார்

ஸ்மிருதி மந்தனாவும் பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், “பவாரால் தான், எங்களால் தொடர்ச்சியாக 14 போட்டிகளை வெல்ல முடிந்தது. எனவே, அவரையே மீண்டும் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.