வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (04/12/2018)

கடைசி தொடர்பு:13:46 (04/12/2018)

`முதலில் செயல்... அப்புறம்..!’ - ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ரிக்கி பாண்டிங் அட்வைஸ்

இந்திய கேப்டன் விராட் கோலியை எதிர்கொள்வது தொடர்பாகவும், இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் தொடர் தொடர்பாகவும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். 

ரிக்கி பாண்டிங்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர், வரும் 6 -ம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடர், இந்திய ஆஸ்திரேலிய ரசிகர்களைத் தாண்டி உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வார்னர், ஸ்மித் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களிடம் இருந்து ஆக்ரோஷமான ஆட்டம் வெளிப்பட வாய்ப்பு இல்லை என்ற கருத்தும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. முன்னாள் வீரர்கள் சிலர், கோலிக்கு எதிராக ஆக்ரோஷமாகச் செயல்பட்டால், அவரை கட்டுப்படுத்துவது சிரமம். அவருக்கு எதிராக அமைதியாக விளையாடுவதே சிறந்தது என்று கருத்து தெரிவித்திருந்தனர். தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூப்பெளஸிஸும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார். 

கோலி ஆக்ரோஷம்

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தத் தொடரில் தங்களது ஆக்ரோஷத்தைக் குறைக்காமல் போராட வேண்டும் எனக் கூறியுள்ளார். பிரபல கிரிக்கெட் இணையதளமான  cricket.com.au -க்கு அளித்த பேட்டியில்,  ``இந்தத் தொடரைப் பொறுத்தவரை கோலி முக்கியமான வீரர். அவரை விரைவில் ஆட்டமிழக்கவைப்பது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு முக்கியம். 

கோலிக்கு பந்துவீசும் முன், முந்தைய தொடர்களை அலச வேண்டும். அவரை எப்படி சிலர் கட்டுப்படுத்தியுள்ளனர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். விராட் கோலிக்கு எதிராக யார் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்? அது ஏன் என்று தெரிந்துகொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த வரை இங்கிலாந்தின் ஆண்டர்சன், கோலிக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அதைத் தொடர்ச்சியாகவும் செய்துள்ளார். அவரது பந்துவீச்சை கவனத்தில்கொள்ள வேண்டும். அவர் அதிரடியாக விளையாடுவதைச் சரியான இடத்தில் ஃபீல்டர்களை நிறுத்தித் தடுக்க வேண்டும். அதன்மூலம் அவருக்கு அழுத்தத்தைக் கொடுக்கலாம். 

ஜான்சன்

இந்திய வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாட ஆஸ்திரேலிய வீரர்கள் தயங்கக் கூடாது. மிட்செல் ஜான்சன் இதை சரியாகச் செய்திருக்கிறார். ஆனால், முதலில் சிறப்பாக மிரட்டும் வகையில் பந்துவீச வேண்டும். அதன்பின்னர்தான், வார்த்தைப் போர் எல்லாமே... பந்துவீச்சில் மிரட்டாமல், வெறும் வார்த்தைப் போரில் ஈடுபட்டால், அது வினையில்தான் முடியும். நாம் அமைதியாக அமர்ந்து, அடுத்தவரின் கொண்டாட்டத்தைப் பார்க்க வரவில்லை. நாம் நமது கிரிக்கெட்டை விளையாட வேண்டும். அவர்கள் (இந்தியா) தான் நமது எல்லைக்குள் விளையாட வந்திருக்கிறார்கள்.

கோலி

நான் விளையாடும்போது, எப்போதும் இந்த வார்த்தை மோதல்கள் இருந்திருக்கிறது. ஆனால் அவை எல்லாம், மிரட்டலான பந்துவீச்சைத் தொடர்ந்து வரும். இது, சரியான கலவையில் இருக்கும்போது கோலியை கட்டுப்படுத்த முடியும். 

இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளதாக அனைவரும் தெரிவித்துவருகின்றனர். அனைவரின் கணிப்பும் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருக்கிறது. ஆனால், எதிர்பார்ப்புதான் அழுத்தத்தைக்கொடுக்கும். இதனால், இந்திய அணிக்குதான் அதிக அழுத்தம் இருக்கும். கோலியால் இந்த அழுத்தத்தைக் கையாளமுடியும். அதனால், அவரை ஆட்டமிழக்கவைப்பதில் ஆஸ்திரேலியர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

குதீப் யாதவ்

இந்திய அணியின் டெஸ்ட் போட்டி வெற்றியில், சுழற்பந்துவீச்சின் பங்களிப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த முறை, குல்தீப் யாதவுக்கு அவர்கள் வாய்ப்பு வழங்க வேண்டும். அதுதான், ஆஸ்திரேலிய மண்ணில் அவர்கள் எடுக்கும் சரியான முடிவாக இருக்கும்” என்றார்.