வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (04/12/2018)

கடைசி தொடர்பு:17:32 (04/12/2018)

நண்பனைத் தீவிரவாதியாக்கிய போலி ஆதாரம்! - கைதான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் சகோதரர்

உஸ்மான் கவாஜா

இலங்கை மாணவர் ஒருவரை போலி ஆவணங்கள் மூலம் போலீஸில் சிக்கவைத்த புகாரில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் ஆர்ஸ்லான் கவாஜா கைது செய்யப்பட்டிருக்கிறார். 

ஆஸ்திரேலிய வீரர்களுடன் ஆர்ஸ்லான் கவாஜா

உஸ்மான் கவாஜாவின் மூத்த சகோதரரான ஆஸ்லான், நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அந்தப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்புப் படித்துவந்த முகமது கமீர் நிஜாமுதீன் என்பவர், ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் டர்ன்புல் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டார். அதற்கு ஆதாரமாகப் போலீஸார், நிஜாமுதீன் எழுதியதாக நோட் புக் ஒன்றைக் கைப்பற்றியிருந்தனர். அவர் மீது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், அந்த நோட்டில் இருந்த கையெழுத்து நிஜாமுதீனுடையது அல்ல என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கடந்த அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட்டார். தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிஜாமுதீன் சுமார் ஒரு மாத காலம் சிறையில் கழித்தார்.

தனது சகோதரர் ஆர்ஸலானுடன் (வலது ஓரம் இருப்பவர்) உஸ்மான் கவாஜா

தன்னைத் தீவிரவாதியாகச் சித்திரித்த போலீஸார் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரவும் நிஜாமுதீன் திட்டமிட்டிருந்தார். மேலும், பணியிடத்தில் தன் மீதான காழ்ப்பு உணர்ச்சியால் சிலர், தன்னை இதில் சிக்கவைத்திருப்பதாகவும் அவர் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்.
இந்தநிலையில், வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக நிஜாமுதீனைப் போலி ஆவணங்கள் மூலம் சிக்கவைத்ததாக ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் ஆர்ஸ்லான் கவாஜா கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெண் ஒருவர்பால் கொண்ட ஈர்ப்பு காரணமாக நிஜாமுதீனைச் சிக்கவைத்ததாக அவர் போலீஸாரிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

குடும்பத்தினருடன் கவஜா சகோதரர்கள்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிட்னி நகர காவல்துறையின் துணை ஆணையர் மைக் வில்லிங், ``நிஜாமுதீனுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருந்துகிறோம். தற்போது விசாரணை சரியான பாதையில் செல்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார். 
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் உஸ்மான் கவாஜா விளையாடவுள்ள நிலையில், அவரின் சகோதரரைப் போலீஸார் கைது செய்திருப்பது ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து உஸ்மான் கவஜாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ``போலீஸ் விசாரணையில் இந்த விவகாரம் இருப்பதால், இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை’’ என்றிருக்கிறார்.