வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (06/12/2018)

கடைசி தொடர்பு:17:00 (06/12/2018)

`டிராவிட்டுடனான விநோத ஒற்றுமை; ஆஸி-யில் முதல் சதம்!’ - அடிலெய்டில் ஜொலித்த புஜாரா

இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார்.

புஜாரா

Credits: BCCI

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்துள்ளது. மிச்செல் ஸ்ட்ராக், ஜாஸ் ஹேஸ்சல்வுட், கம்மின்ஸ் பந்துவீச்சு கூட்டணி இந்திய அணியின் பேட்டிங்கைப் பதம் பார்த்தது எனலாம். இவர்களின் வேகத்தில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நடையைக் கட்டினர். இந்த வருடத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கோலிகூட இவர்களின் வேகத்துக்குத் தாக்குப்பிடிக்கவில்லை. கே.எல்.ராகுல் 2, விஜய் 11, கோலி 3 எனச் சொற்ப ரன்களில் நடையைக்கட்டினர். 

ஆஸ்திரேலியா

புஜாரா களமிறங்கியபோது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரஹானே களத்தில் இருந்தார். மேற்கொண்டு இந்திய அணி 22 ரன்கள் எடுத்த நிலையில் ரஹானே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். புஜாரா நிதானமாக விளையாடினார். தேவையற்ற பந்துகளை விளையாடுவதைத் தவிர்த்தார். ரோஹித் ஷர்மா புஜாராவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கும் நோக்கில் விளையாடியது. அணியின் ஸ்கோர் 87 ஆக உயர்ந்தபோது 37 ரன்கள் எடுத்த நிலையில் டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்சாகி ரோஹித் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் புஜாரா தன்னம்பிக்கையுடன் விளையாடினார். ரிஷப் பன்ட் (25), அஸ்வின் (25) ஆகியோர் புஜாராவுக்கு ஓரளவு ஒத்துழைப்பு அளித்தனர். 

ரோகித் ஷர்மா

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா தனது 16-வது டெஸ்ட் சதத்தை அடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் புஜாரா அடிக்கும் முதல் சதம் இதுவாகும். 123 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ரன் அவுட்டாகி வெளியேறினார். இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்திருந்தபோது, முதல்நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. ஷமியும் பும்ராவும் களத்தில் உள்ளனர்.

கிரிக்கெட்

இந்திய அணிக்காக 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கங்குலி 35 அரை சதங்கள் மற்றும்16 சதங்கள் எடுத்துள்ளார். தனது 65-வது டெஸ்ட் போட்டியில் புஜாரா தனது 16-வது டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார். இந்த சதத்தின் மூலம் கங்குலியின் சாதனையையும் புஜாரா சமன் செய்தார். அதேபோல் ஆசியாவுக்கு வெளியே நடைபெறும் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் சதம் அடித்த 6-வது இந்திய வீரர் என்ற சிறப்பையும் புஜாரா பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் 105 ரன்கள் எடுத்திருந்தபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லையும் அவர் எட்டினார்.

டிராவிட்

இந்திய அணியின் சுவர் என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டியில் குவித்த ரன்களும் புஜாராவின் ரன்குவிப்பும் ஒற்றுமையாகக் காணப்படுகிறது. டெஸ்ட் போட்டியில் டிராவிட் 3,000 ரன்களை தனது 67 வது இன்னிங்ஸில் கடந்தார். 4,000 ரன்களை 84-வது இன்னிங்ஸிலும், 5,000 ரன்களை 108 வது இன்னிங்ஸிலும் கடந்தார். புஜாராவும் தனது 5,000 ரன்களை முறையே இவ்வாறு கடந்துள்ளார். டிராவிட்டும் புஜாராவும் வலது கை பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.