வெளியிடப்பட்ட நேரம்: 19:29 (07/12/2018)

கடைசி தொடர்பு:19:29 (07/12/2018)

`அஷ்வின் ஆபத்தானவர் ’- கவாஸ்கர் புகழாரம்

சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் ஆபத்தானவர் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அஷ்வின்

Credits: ICC


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. இந்தப் போட்டியில் புஜாரா தனியாளாக சதம் அடித்து அசத்தினார். இதையடுத்து, இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஹேசல்வுட் முதல் ஓவரை வீசினார். அவரது முதல் பந்திலேயே இந்திய வீரர் ஷமி விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஆஸ்திரேலிய வீரர்கள் முதல் இன்னிங்ஸை ஆடினர். ஆஸ்திரேலியாவுக்குத்தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இஷாந்த் ஷர்மாவின் முதல் ஓவரின் 3-வது பந்தில் ஆரோன் பின்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் ஓவரிலே விக்கெட்டை பறிகொடுத்ததால் ஆஸ்திரேலிய வீரர்கள் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  

இஷாந்த் சர்மா

ஹாரிஸ் மற்றும் கவாஜா இன்னிங்ஸை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டரை தனது சுழலால் அசைத்துப்பார்த்தார். அவரது முயற்சிக்கு அடுத்தடுத்து பலன் கிடைத்தது. ஹாரிஸ், கவாஜா மற்றும் ஷான் மார்ஷ் ஆகியோர் இவரது சூழலில் சிக்கினர். வேகம் மற்றும் சூழல் என இந்திய வீரர்களின் இரட்டைத் தாக்குதலை சமாளிக்க ஆஸ்திரேலிய வீரர்களை தடுப்பாட்டத்தை கையில் எடுத்தனர். இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப்போட்டி குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஷேவாக், ``இந்திய அணிக்கு இது சிறப்பான நாள். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அஷ்வின் பந்துவீச்சில் அமர்களப்படுத்திவிட்டார். விக்கெட்டுகளை விரைவில் இழந்த ஆஸ்திரேலிய வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய வீரர்கள் தங்களது பிடியைத் தளரவிடக்கூடாது தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவிக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்

அஷ்வினுக்குப் பாராட்டு தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ``கேப்டன் கோலி ஒரு வீரராக அஷ்வினிடம் எதிர்பார்த்தைவிட அதிகப்படியானதை இரண்டாம் நாளில் அளித்துள்ளார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியில் அவர் பந்துவீசிய விதம் என்னைக் கவர்ந்தது'' எனத் தெரிவித்துள்ளார். மேலும், ``இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அஷ்வின் சரியாக விளையாடவில்லை. வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவரது பந்துவீச்சு எடுபடவில்லை. மொயின் அலி அதில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், அடிலெய்டில் அஷ்வின் அசத்தியுள்ளார். நாதன் லயனிடம் இருந்து சில நுணுக்கங்களை அஷ்வின் இந்தப் போட்டியில் கற்றுக்கொண்டார். எதிரணியினரிடமிருந்து நாம் கற்றுக்கொள்வது தவறானது இல்லை. அதன் மூலம் நமது விளையாட்டை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மற்றவர்களைப் போன்று அப்படியே செயல்பட வேண்டும் என்று இல்லை நம்முடைய விளையாட்டில் அதனை உட்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.