`கிரிக்கெட்டில் கவுத்தி இன்னும் கில்லிதான்’ - கடைசிப் போட்டியில் அசத்திய கம்பீர் !#ThankyouGauti | Gambhir took century in his farewell match

வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (08/12/2018)

கடைசி தொடர்பு:13:29 (08/12/2018)

`கிரிக்கெட்டில் கவுத்தி இன்னும் கில்லிதான்’ - கடைசிப் போட்டியில் அசத்திய கம்பீர் !#ThankyouGauti

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கம்பீர். டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி 20 என அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய அணிக்கு நிலையான தொடக்கத்தை அளித்தவர். டி 20 மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடர்களை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். சமீபகாலமாக, அவர் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டு வந்தார். ஆனாலும் தொடர்ந்து உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐ.பி.ல் போட்டிகளில் விளையாடி வந்தார். 

கம்பீர்

இந்நிலையில் கடந்த 4-ம் தேதி தனது ஓய்வை அறிவித்தார். இது தொடர்பாக உருக்கமாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். அதில், ‘இது முடிந்துவிட்டது கவுத்தி’ என்ற எண்ணம் எனக்குள் எழுந்துவிட்டது. இப்போது முடிவெடுத்துவிட்டேன். “இது முடிந்துவிட்டது’ என்று சொல்ல வேண்டிய இடத்துக்கு வந்துவிட்டேன். கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று கடந்த  6-ம் தேதி ஆந்திர அணிக்கு எதிரானப் போட்டிதான் தனது கடைசிப் போட்டி எனவும் தெரிவித்தார்.

thankyou gambhir

Photo: PTI

தனது சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆந்திர அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 390 ரன்கள் எடுத்து, பின்னர் தனது முதலாவது இன்னிங்ஸை தொடங்கியது டெல்லி அணி. 

சதமடித்த மகிழ்ச்சியில் கம்பீர்

Photo: PTI

தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய கம்பீர் அபாரமாக விளையாடினார், உடன் களமிறங்கிய தலாலும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். நிதான ஆட்டத்தைத் தொடர்ந்த கம்பீர் சதம் அடித்தார். தனது ஓய்வை அறிவித்து, கடைசிப் போட்டியில் விளையாடிய கம்பீர், சதமடித்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கம்பீரின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் மைதானத்துக்கு அதிக அளவில் வந்தனர். அவர்களை ஏமாற்றாமல் கம்பீர் சிறப்பாக விளையாடி மகிழ்வித்தார். 

கம்பீர்

இறுதியாக 112 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தர். டெல்லி அணி தற்போது 2 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. போட்டி நாளை முடிவடையும் என்பதால், கம்பீர் மீண்டும் பேட் செய்யும் வாய்ப்பு மிகக் குறைவு. கிரிக்கெட்டில் கவுத்தி இன்னும் கில்லிதான் என தனது கடைசிப் போட்டியிலும் காட்டியுள்ளார். #ThankyouGauti