வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (08/12/2018)

கடைசி தொடர்பு:15:17 (08/12/2018)

சச்சின், டிராவிட், லட்சுமண் வரிசையில் கோலி; மீண்டும் கைகொடுத்த புஜாரா - முன்னிலையில் இந்தியா

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 166 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கோலி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்கள் எடுத்த 4 வது வீரர் என்ற சாதனையும் படைத்தார். 

கோலி புஜாரா ஜோடி

Photo: Twitter/BCCI

இந்திய ஆஸ்திரேலிய அணிகள்  மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியானது தற்போது அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இந்திய அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தாலும், பின் வரிசை வீரர்களின் துணையுடன் புஜாரா கூட்டணி அமைத்து கெளரவமான ஸ்கோரை எட்ட உதவினார். அதன் பின்னர், தனது முதலாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து டாட் பால்கள் வீசி அழுத்தம் அளித்தனர். அதன் காரணமாக சீரான இடைவெளியில் முக்கிய விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்து வந்தது. 

பும்ரா

Photo: Twitter/BCCI

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. மைதானம் நேற்று இரவு பெய்த மழையால் ஈரமாக இருந்ததால், இன்றைய மூன்றாவது நாள் ஆட்டம், தாமதமாகத் தொடங்கியது. ஆட்டத்தின் நடுவே மழை அவ்வப்போது குறுக்கிடவும் செய்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி, 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக, ஹெட் 72 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த், ஷமி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 

ராகுல்

Photo: Twitter/BCCI

15 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக விஜய், ராகுல் ஜோடி களமிறங்கியது. நிதானமாக விளையாடிய விஜய், 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ராகுல், நிதானமாகவும் அதே நேரத்தில் மோசமான பந்துகளை பவுண்டரிக்கும் அனுப்பிச் சிறப்பாக விளையாடி வந்தார். அவர் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

லயன்

Photo: Twitter/BCCI

அதன் பின்னர் கேப்டன் கோலி - புஜாரா ஜோடி நிதானமாக விளையாடியது. குறைப்பாகக் கோலி, புஜாராவுக்கே சவால் விடுக்கும் வகையில் பொறுமையுடன் தனது இன்னிங்ஸை தொடங்கினார். நல்ல பந்துகளுக்கு மதிப்பளித்து, அதைத் தொடர்ந்து தவிர்த்து வந்தார். இந்த ஜோடியைப் பிரிக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து பல்வேறு முயற்சிகளைச் செய்தது. இறுதியில், லயன் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்தார். அவர், 104 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். சச்சின் லட்சுமண், டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் 1,000 ரன்கள் எடுக்கும் 4-வது இந்தியர் என்ற சாதனையும் இன்றையப் போட்டியில் அவர் படைத்தார். 

கோலி

Photo: Twitter/BCCI

மூன்றாம் நாளின் இறுதியில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 166 ரன்கள் முன்னிலையில் உள்ளது. புஜாரா 40 ரன்களுடனும் ரஹானே 1 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில் இந்திய அணி தற்போது நல்ல நிலையிலே உள்ளது. நாளை சிறப்பாக விளையாடி நல்ல ஸ்கோரை நிர்ணயம் செய்துவிட்டால் ஆஸ்திரேலிய அணிக்கு முதல் போட்டியிலே இந்திய அணி சவால் அளிக்க முடியும். இந்திய அணி தற்போது முன்னிலையில் உள்ளது, ஆனால், இன்னும் ஆட்டம் இந்திய அணியின் வசம் வரவில்லை என்பதால், நல்ல இலக்கை எட்டும் வரை பொறுமையுடன் விளையாடுவது அவசியம்.