வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/12/2018)

கடைசி தொடர்பு:06:00 (09/12/2018)

`எனக்கு எதுவும் எளிதில் கிடைத்துவிடவில்லை; போராட்டங்கள் மூலமே எட்டினேன்!’ - மனம் திறந்த கம்பீர்

அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும்  ஓய்வு பெறுவதாக, கடந்த 5-ம் தேதி, அறிவித்தார் கவுதம் கம்பீர். அவரை, ”மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்” என்று, கிரிக்கெட் வீரர்கள் பாராட்டினர். ”இந்தியாவின் இரண்டு உலகக்கோப்பை வெற்றிக்குப் பின்னிருந்தவர்” என்று, கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்தினர். ”கிரிக்கெட் உலகின் உள்அரசியலால் பாதிக்கப்பட்டவர்” என்று, கிரிக்கெட் விமர்சகர்கள், வருந்தினர்.

கம்பீர்

இன்றோடு கவுதம் கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. ரஞ்சிப்போட்டியில், டெல்லி அணிக்காகச் சதமடித்த திருப்தியோடு விடைபெறுகிறார்.  இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு, நீண்ட பேட்டி அளித்துள்ளார் கம்பீர். அதில், “என்னிடம் இன்னமும் கிரிக்கெட் திறமை மீதமிருக்கிறது. ஆனால், என் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. இதில் எனக்கு வருத்தமில்லை. ஏனென்றால், எதுவும் எனக்கு எளிதில் கிடைக்கவில்லை. போராட்டங்களின் மூலமே ஒவ்வொரு நிலையையும் எட்டியிருக்கிறேன்.

கம்பீர்

இங்கே, கிரிக்கெட் அமைப்பு மட்டுமல்ல, அத்தனை அமைப்புகளுமே உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. அவர்களின் தவறுகளை காட்டும் கண்ணாடியை, அவர்கள் விரும்புவதில்லை. என்னைச் சுற்றியிருப்பவர்கள், ‘நான் அனுசரித்துச் செல்ல வேண்டும்’ என்று சொன்னார்கள். ஆனால், அது என்னால் இயலாதது. தவறுகளையும், போலித்தனங்களையும் என்னால் சகித்துக்கொள்ள முடியாது. இதனால், நிறைய எதிரிகளை உருவாக்கிக்கொண்டேன் என்பதை மறுக்கவில்லை. ஆனால், என்னால் நிம்மதியாக உறங்க முடிந்தது. 

கம்பீர்

நான் புனிதமானவன் என்று சொல்லவில்லை. ஆனால், நமது அமைப்பில் இருக்கும் நிறைய விஷயங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. அதையெல்லாம் கேள்விகேட்பது என் உரிமை என்று நினைக்கிறேன். அதனால், கேள்விகள் கேட்கிறேன். நான் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனும் அதைச்செய்யவேண்டும். இல்லையென்றால், இந்த அமைப்பால் நசுக்கப்படுவோம். அடுத்தது என்னவென்று இன்னும் முடிவுசெய்யவில்லை. இங்கே மாற்றம் தேவைப்படுகிறது. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்” என்று சொல்லியிருக்கிறார்.