வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (09/12/2018)

கடைசி தொடர்பு:14:00 (09/12/2018)

ஆஸி.,க்கு 219 ரன்கள்; இந்தியாவுக்கு 6 விக்கெட்டுகள் -பரபரப்பானக் கட்டத்தில் முதல் டெஸ்ட்

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி வெற்றிபெற 6 விக்கெட்டுகளும், ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 219 ரன்களும் தேவை. 

டெஸ்ட் போட்டி

இந்திய ஆஸ்திரேலிய அணிகள்  மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியானது தற்போது அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் எடுத்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 3 -ம் நாளின் முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 166 ரன்கள் முன்னிலையில் இருந்தது. 

புஜாரா

இதனைத் தொடர்ந்து இன்று  4 -ம் நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா ராஹனே ஜோடி பொறுமையுடன் விளையாடியது. இவர்களின் நிதானமான ஆட்டத்தினால், இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயம் செய்யும் நிலை இருந்தது. ஆனால் 71 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா ஆட்டமிழக்க, இந்திய அணியின் நடுவரிசை ஆட்டம் கண்டது. ரோகித் ஷர்மா 1 ரன்னிலும், பண்ட் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பண்ட், அதிரடியாக விளையாடினார். 

லயன்

அஷ்வின் 5 ரன்னில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து ராஹானேவும் 70 ரன்னில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சுழற்பந்துவீச்சளரான லயன் சிறப்பாக பந்துவீசி இந்திய வீரர்களைக் கட்டுப்படுத்தினார். இதனால் இறுதியில் இந்திய அணி 307 ரன்னுக்கு ஆட்டமிழந்து, ஆஸ்திரேலிய அணிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயன் 6 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினார்.

ரோகித்
 

அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. முதல் ஓவரிலே பிஞ்ச் ஆட்டமிழக்க, ரீ -ப்ளேவில் இஷாந்த் வீசியது நோ-பால் என தெரிந்ததால் தப்பித்தார். இருந்தும் அதிக நேரம் நீடிக்காத பிஞ்ச் 11 ரன்னில் அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நான்காம் நாளின் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற இன்னும் 219 ரன்கள் தேவை, இந்திய அணி வெற்றிபெற 6 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில் நாளைக் கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. நாளைய ஆட்டம்  மழையால் பாதிக்கப்படாதபட்சத்தில் இந்தப் போட்டி டிராவில் முடிவடைய வாய்ப்புகள் குறைவு. ஆஸ்திரேலியா வீரர்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்க இந்தியா அனுமதிக்காதப்பட்சத்தில் இந்திய அணிக்கு வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம்.