வெளியிடப்பட்ட நேரம்: 08:53 (10/12/2018)

கடைசி தொடர்பு:11:45 (10/12/2018)

அந்த ஒரு நிமிட அவசரம்...ஏன் கம்பீர்?! #ThankYouGambhir

கில்கிறிஸ்ட், மொகிந்தர் அமர்நாத் ஆகியோருக்கு நிகழ்ந்ததுபோல் `ஓய்வு பெற்றார் உலகக் கோப்பை ஃபைனலின் மேட்ச் வின்னர்' என்ற தலைப்பு இவரது ஓய்வுக்கட்டுரைகளுக்கு வைக்கப்படப்போவதில்லை.

அந்த ஒரு நிமிட அவசரம்...ஏன் கம்பீர்?!  #ThankYouGambhir

பெரும்பாலான கட்டுரையாளர்களுக்கு, கட்டுரை எழுதுவதோ, அதை எழுதுவதற்குச் செய்யும் ஆய்வுகளோ, பெரிய கஷ்டமாக இருக்காது. `இந்தக் கட்டுரைக்கு என்ன பெயர் வைப்பது?' என்ற கேள்விக்கான பதிலைத் தேடுவதுதான் மிகவும் கடினம். அந்தக் கட்டுரை எத்தனை வார்த்தைகள், எத்தனை பக்கங்கள் இருக்கிறது என்பது பிரச்னை இல்லை. அந்த ஒரு வரித் தலைப்பு - தன் மொத்த உழைப்புக்கும் அர்த்தம் சேர்க்கவேண்டும். முதல் வரியிலிருந்து, கடைசி முற்றுப்புள்ளிவரை சொல்லப்பட்டிருக்கும் முக்கிய விஷயங்களின் சாராம்சத்தை, ஒற்றை வரியில் சுருக்கி, அதை அர்த்தமாக்கி, அழகாக்கவேண்டும். படிப்பவர்களை ரசிக்க வைக்கும் வகையிலும், கடந்து போகிறவர்களைப் படிக்கவைக்கும் வகையிலும் அதன் கவிர்ச்சியைக் கூட்டவேண்டும். அந்தத் தலைப்பு, கட்டுரையை விடத் தெளிவாகவும், அழகாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் அந்தக் கட்டுரையாளரால் முழு திருப்தியுடன் அதைப் பிரசுரிக்க முடியும். கௌதம் கம்பீர் -  அந்தத் திருப்தியைக் கொடுக்கவில்லை. `ஓய்வு பெற்றார் உலகக் கோப்பை ஃபைனலின் மேட்ச் வின்னர்' என்ற தலைப்பு இன்று பெரும்பாலான கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கவேண்டும். ஆனால் அது நடக்கவில்லை! 

`உலகக் கோப்பை ஃபைனலின் மேட்ச் வின்னர்' என்பது ஓர் ஆட்டத்துக்கான பெருமை மட்டுமல்ல. அது வாழ்நாளுக்குமான அங்கீகாரம், அடையாளம். இன்றுவரை மொஹிந்தர் அமர்நாத் என்ற அற்புதமான பேட்ஸ்மேனின் அடையாளம் `1983 ஃபைனலின் ஆட்டநாயகன்' என்பதுதான். பதினாறாயிரத்துக்கும் அதிகமான சர்வதேச ரன்கள் அடித்திருந்தாலும், 800-கும் மேற்பட்ட கேட்ச்கள் பிடித்திருந்தாலும், கில்கிறிஸ்ட் கொண்டிருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் '2007 உலகக் கோப்பை ஃபைனலின் ஆட்டநாயகன்'. ஜேம்ஸ் ஃபால்க்னர் - ஆஸ்திரேலியாவுக்காக 100 போட்டிகள்கூட ஆடவில்லை. பெரிதாக சாதனைகள் ஏதும் செய்ததில்லை. ஆனால், 2015 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அவர் வென்ற ஆட்டநாயகன் விருது, அவர் பெயரை காலத்துக்கும் நிலைத்து வைத்திருக்கும். ஒருவேளை அந்த விருதை கம்பீர் வென்றிருந்தால், அதுதான் இன்று பெரும்பாலான கட்டுரைகளின் தலைப்பாக இருந்திருக்கும். அதுதான் அவரது 19 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கும், அதில் அவர் செய்ததற்குமான மரியாதையாக இருந்திருக்கும். 

கம்பீர்

`மஹேலா ஜெயவர்தனே ஆடியதில் உங்களுக்குப் பிடித்த இன்னிங்ஸ் எது?' என்று கடந்த மாதம் ஐ.சி.சி. ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் அதிக வாக்கு பெற்றது - 2011 உலகக் கோப்பையில் அவர் அடித்த சதம். டெஸ்ட் அரங்கில் பல அற்புதமான இன்னிங்ஸ்கள் ஆடியிருந்தாலும், அவருக்கு அடையாளமாக இருப்பது அந்த ஆட்டம்தான். காரணம் - உலகக் கோப்பை. அது அந்த தேசத்துக்கான அடையாளம். அங்கு செய்யும் ஒவ்வொரு விஷயமுமே ஸ்பெஷல்தான். கபில்தேவ் பிடித்த கேட்ச், நெஹ்ராவின் ஆறு விக்கெட், யுவியின் அசத்தல் பௌலிங்... எல்லாம் காலம் கடந்தும் பேசப்படும். இறுதிப் போட்டியில் அசத்தும்போது, அது வரலாற்றில் எழுதப்படும்! கம்பீர் 3 ரன்களில் சதத்தையும் தவறவிட்டு, அதனால் ஆட்ட நாயகன் விருதையும் இழந்து, தன் கிரிக்கெட் வாழ்க்கையில் கிடைக்கவேண்டிய மிகப்பெரிய அங்கீகாரத்தை இழந்திருக்கிறார்.

அவர் அந்த அங்கீகாரத்தை இழந்ததற்கு நிச்சயம் அவரது ஈகோதான் காரணம். ஈகோ என்றவுடன், கம்பீர் - கோலி விஷயத்துக்குப் போய்விடவேண்டாம். இங்கு குறிப்பிடப்படுவது கேப்டன் கம்பீர் களத்தில் காட்டும் ஈகோ அல்ல. பேட்ஸ்மேன் கம்பீர் பிட்ச்சுக்குள் எப்போதுமே காட்டும் ஈகோ. கம்பீரின் ஆட்டத்தைக் கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் புரியும்... ஒரு பௌலரை அவர் டார்கெட் செய்துவிட்டால், தன் திட்டத்தில் வெற்றி பெறாமல் பின்வாங்கமாட்டார். ஒரு பந்தை அவர் அட்டாக் செய்ய நினைத்தால், அதை பௌண்டரி அனுப்பியே ஆகவேண்டும். ஒருவேளை அது தவறிவிட்டால், அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த பௌலரிடம் தன் ஈகோவை அவரால் இழக்கமுடியாது. அடுத்த பந்து `டவுன் தி டிராக்' வந்து பௌண்டரி அடிக்க முற்படுவார். கம்பீர் பேட்ஸ்மேனாகவே தன் ஈகோவை விட்டுக்கொடுக்காதவர். அந்த இறுதிப் போட்டியில் அப்படித்தான்.... அந்த ஒற்றைப் பந்தில் அவசரப்பட்டு...

கம்பீர்

அந்த இறுதிப்போட்டியில் கம்பீர் டார்கெட் செய்தது திசாரா பெராரா. இந்திய இன்னிங்ஸின் ஆறாவது ஓவரை பெராரா வீசுகிறார். நான்காவது பந்தை கம்பீரால் அடிக்க முடியவில்லை. உடனே ஐந்தாவது பந்து இறங்கி வந்து பௌண்டரி அனுப்பினார். ஒன்பதாவது ஓவரின் கடைசிப் பந்து - இறங்கி வந்து முடியவில்லை. பதினோறாவது ஓவரின் முதல் பந்து - இறங்கி வந்து பௌண்டரி. இது கம்பீரின் வழக்கமான குணம்தான். பெராராவின் ஒரு பந்தை அடிக்க முடியாமல் போனால், அடுத்த பந்தை இறங்கி வந்து அடித்துக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இப்படி ஆடியது சரி. ஆனால், 97 ரன்களில் இருக்கும்போது? அந்த முதல் பந்தில் ரன் எடுக்க முடியவில்லை என, எதையும் யோசிக்காமல் இறங்கி வந்தாரே... பௌன்ஸ் ஆகாமல் வந்த அந்தப் பந்தை, ஆஃப் சைட் அடிக்க முற்பட்டதிலேயே அவர் பந்தைக் கணிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஏன்? அந்த நேரத்தில்கூட அவரது ஈகோவைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஏன் கம்பீர்?

அந்த ஒரு பந்து நிதானமாக ஆடியிருந்தால்...? போல்டாகாமல் இருந்திருந்தால்..? இன்னும் கொஞ்சம் ஆடியிருந்தால்..? உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெயரும், ஆட்டநாயகன் விருதும் அவர்வசம் ஆகியிருக்கும். இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் மறக்க முடியாத இன்னிங்ஸாக மாறியிருக்கும். ஆனால், எதுவுமே இல்லாமல் போய்விட்டதே! கௌதி - அந்தப் பந்தில் அவசரப்பட்டிருக்கக் கூடாது.

கம்பீர்

டி-20 உலகக் கோப்பை ஃபைனலில் 75 ரன்கள். ஆனால், வென்று கொடுத்தது இவர் இல்லை. ஆட்ட நாயகன் விருதுகூட இர்ஃபானுக்குத்தான். 2011 உலகக் கோப்பை ஃபைனலில் 97 ரன்கள். ஆனால், வென்று கொடுத்தது இவர் இல்லை. ஒருமுறை கோலியை முறைத்ததனால், இவரது ஆட்டிட்யூட் இன்றுவரை தவறாகவே பேசப்படுகிறது. கோலியின் கையில் முதல் ஆட்டநாயகன் விருதைக் கொடுத்ததே இவர்தான்! கேப்டனுடன் மனக்கசப்பு இருந்ததையும் ஓப்பனாகவே பேசியிருக்கிறார். எப்போதும் தான் நினைத்தபடியே நடந்திருக்கிறார். நான் மிகவும் Straight forward, எனக்கு அரசியல், கிரிக்கெட் நிர்வாக வேலை எல்லாம் செட் ஆகாது என்கிறார். ஒரு கேப்டனின் கீழ் நாம் எத்தனை போட்டிகள் ஆடினோம் என்பது முக்கியமில்லை. ஆனால், அவரிடம் நான் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்பது முக்கியம். அந்த வகையில் என்னிடம் நேர்மையாகவும், Selfless ஆக நடந்துகொண்டவர் கும்ப்ளேதான். அவர்தான் என் மனதுக்கு நெருக்கமான கேப்டன் என்கிறார். முகதாட்சண்யத்துக்காகவேணும், கம்பீர் போலியாக யாரையும் புகழ்ந்ததில்லை. அது தனக்கு நன்மையே பயக்குமெனினும், அதைச் செய்ததில்லை. இவையெல்லாவும்தாம் கம்பீரின் கேரியரை பாதித்திருக்கிறது. அதைப்பற்றி அவர் கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை. 

கில்கிறிஸ்ட், மொகிந்தர் அமர்நாத் ஆகியோருக்கு நிகழ்ந்ததுபோல் `ஓய்வு பெற்றார் உலகக் கோப்பை ஃபைனலின் மேட்ச் வின்னர்' என்ற தலைப்பு இவரது ஓய்வுக்கட்டுரைகளுக்கு வைக்கப்படப்போவதில்லை. `இந்தியாவின் சிறந்த ஓப்பனர்களில் ஒருவர்', 'இரண்டு ஐ.பி.எல் கோப்பைகள் வென்ற கேப்டன்' போன்ற தலைப்புகள்தான் பெரும்பாலும் வைக்கப்படும். நிச்சயம் நான் அப்படியான தலைப்புகள் வைக்கப்போவதில்லை. Because Gambhir deserves much more! 

pic courtesy : ESPNcricinfo


டிரெண்டிங் @ விகடன்