வெளியிடப்பட்ட நேரம்: 10:52 (10/12/2018)

கடைசி தொடர்பு:11:16 (10/12/2018)

உலக சாதனையை சமன் செய்த பன்ட்; அடிலெய்டில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா #AusvInd

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. 

இந்திய அணி

இந்திய ஆஸ்திரேலிய அணிகள்  மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.  டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் எடுத்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 

விக்கெட்

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நான்காம் நாளின் இறுதியில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே, இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். சில வீரர்கள் சிறிது நேரம் தாக்குப்பிடித்தாலும், பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாததால், ஆஸ்திரேலிய அணி தவித்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய லயன் மற்றும் ஹேசில்வுட்டும் இந்திய அணிக்கு போக்கு காட்டினர்.  

இந்திய ரசிகர்கள்

இந்திய அணி தரப்பில் பும்ரா, ஷமி, அஷ்வின் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல் முறையாக வெற்றியுடன் தொடங்கி சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் 11 கேட்சுகள் பிடித்த, இந்திய விக்கெட் கீப்பர் பன்ட், டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையை சமன் செய்தார். ஆட்டநாயகனாக புஜாரா தேர்வு செய்யப்பட்டார். 

கோலி

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது 1-0 என முன்னிலையில் உள்ளது.