வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (10/12/2018)

கடைசி தொடர்பு:11:35 (10/12/2018)

``அந்தப் பொக்கிஷத்தைத் தவிர எங்களிடம் எதுவும் இல்லை!''- லிட்டில் மெஸ்ஸி குடும்பம் கெஞ்சல்

ப்கானிஸ்தானைச் சேர்ந்த முர்டாஷா அகமதிக்கு தற்போது 7 வயதாகிறது. அர்ஜென்டினா சூப்பர்ஸ்டார் மெஸ்ஸியின் தீவிர ரசிகன். இரு ஆண்டுகளுக்கு முன், மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக அணிந்து விளையாடும் 10-ம் எண் ஜெர்சியை வாங்கித் தருமாறு தந்தையிடம் முர்டாஷா அடம் பிடித்தான். ஏழ்மை நிலையில் இருந்த முர்டாஷாவின் தந்தை பிளாஸ்டிக் பேக் ஒன்றை அர்ஜென்டினா வர்ண ஜெர்சி போல வரைந்து அதில் 10-ம் எண் எழுதி மகனிடம் கொடுத்தார். முர்டாஷா அந்த ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. 

மெஸ்ஸி

முர்டாஷாவின் மெஸ்ஸி மீதான பற்று பார்சிலோனா வரை பரவியது. மெஸ்ஸியின் நண்பர்கள் ஆப்கானிஸ்தானுக்கு வந்து முர்டாஷாவைச் சந்தித்து பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளின் ஜெர்சிகளை வழங்கி அவனை உற்சாகப்படுத்தினர். கடந்த ஆண்டு தோஹாவில் நட்புரீதியிலான ஆட்டத்தில் பங்கேற்க பார்சிலோனா அணி வந்தபோது, மெஸ்ஸியைச் சந்தித்து மகிழ்ந்தான் முர்டாஷா. மெஸ்ஸியைச் சந்தித்த பிறகு அகில உலகமும் பாப்புலரானான் முர்டாஷா. இதுவெல்லாம் பழைய கதை!

மெஸ்சி

காபூல் நகரத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கான்சி என்ற கிராமத்தில் முர்டாஷாவின் குடும்பம் வசித்து வந்தது. அந்த சந்திப்புக்குப் பிறகு சிறுவன் குடும்பத்திடம் நிறைய பணம் சேர்ந்திருக்கும் என்று கருதிய தலீபான்கள், 'மெஸ்ஸி கொடுத்த பணத்தை எங்களிடம் கொடுத்துவிடுங்கள்' என்று மிரட்டுகிறார்களாம். அதோடு, சிறுவனைப் பள்ளிக்கு அனுப்பவும் விடுவதில்லை. கடந்த இரு ஆண்டுகளாக பள்ளிக்குப் போக முடியாமல் முர்டாஷா தவித்து வருகிறான். 

இது குறித்து முர்டாஷாவின் தாய் ஷாஃபிகா அகமதி கூறுகையில், ``மெஸ்ஸியைச் சந்தித்த பிறகு அதனால் கிடைத்த புகழால் எங்களுக்கு நிறைய பணம் கிடைத்திருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். எங்களிடம்  பொக்கிஷம் போன்ற அந்த ஜெர்சியை தவிர வேறு எதுவுமில்லை. இப்படி நடக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை''  என்று வேதனைப்படுகிறார். 

தற்போது முர்டாஷாவின் குடும்பம் காபூல் நகரத்தில் உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க