கம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர்  முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம் | Pant make fun of cummins in first test match

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (10/12/2018)

கடைசி தொடர்பு:13:40 (10/12/2018)

கம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர்  முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பன்ட் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸை வம்புக்கிழுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பன்ட்

அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 11 கேட்சுகள் பிடித்து, ஒரு போட்டியில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையைச் சமன் செய்தார். 

pant

இந்திய- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் என்றதுமே முதலில் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஸ்லெட்ஜிங்தான். அந்த அளவுக்கு வீரர்கள் இடையே மோதல்கள் இருக்கும். வார்னர், ஸ்மித் போன்ற வீரர்கள் இல்லாத காரணத்தால் இந்த முறை ஆஸ்திரேலிய வீரர்களிடம் ஆக்ரோஷமான ஆட்டம் இருக்காது என்று முன்னர் கணிக்கப்பட்டது. ஆனாலும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க், இந்திய வீரர்களுக்குப் பந்துவீசும் போது வம்பிழுத்தார். கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் போன்ற வீரர்களும் இதுபோன்று செயல்பட்டனர். ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்யில் மாஸ்டர்ஸ் டிகிரி பெற்றவர்கள் என்று கூறும் அளவுக்கு மோதல் போக்கைக் கடைபிடிப்பார்கள். 

ஸ்லெட்ஜிங்

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பன்ட், இந்த முறை ஆஸ்திரேலிய வீரர்களிடம் நக்கல் கலந்து ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்ரேலிய அணி தனது இலக்கை நோக்கி ஆடிக்கொண்டு இருக்கையில் கம்மின்ஸுக்குப் பின்னால் நின்றுகொண்டு தொடர்ச்சியாக சத்தமாகப் பேசிக்கொண்டே இருந்தார். 

இவர் தொடர்ச்சியாகப் பேசுவதைக் கவனித்த வர்ணனையாளர்கள், அஷ்வின் பந்துவீசும்போது, தங்களின் வர்ணனையை நிறுத்திவிட்டு, பன்ட் பேசுவதை மட்டும் ஒளிபரப்பினர். அப்போது அவர்,  ``இங்கு அனைவரும் புஜாரா இல்லை. இங்குத் தாக்குப்பிடிப்பது எளிதல்ல. பேட் (கம்மின்ஸ்), மோசமான பந்தை சிக்ஸ் அடி பார்க்கலாம்” என்று தொடர்ச்சியாக கூறிக்கொண்டே இருந்தார்.

 ட்வீட்

ஆஸ்திரேலிய மண்ணியில் ஆஸ்திரேலிய வீரர்களிடமே ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்ட பன்ட் -க்கு இந்தியாவில்  பாராட்டு குவிந்துவருகிறது. பன்ட் பேசுவதை கவனிக்க கமென்ட்ரி நிறுத்தப்பட்டதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்,  ``ஸ்டம்ப் மைக் ஆன்... ஒரு முழு ஓவருக்கான கமென்ட்ரி நிறுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.