`பெர்த்-ல் ஆஸ்திரேலியா மாயாஜாலம் பலிக்கும்!’ - ரிக்கி பாண்டிங் நம்பிக்கை | Perth more suitable for Aussies, says Ponting

வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (11/12/2018)

கடைசி தொடர்பு:16:23 (11/12/2018)

`பெர்த்-ல் ஆஸ்திரேலியா மாயாஜாலம் பலிக்கும்!’ - ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

பெர்த் மைதானம், இந்திய வீரர்களைவிட ஆஸ்திரேலிய வீரர்களுக்கே ஏற்றதாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார். 

இந்திய அணி

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்தது. இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, பெர்த் மைதானத்தில் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. 

ரிக்கி பாண்டிங்

இந்தப் போட்டிகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி அளித்திருக்கிறார். அதில், ``பெர்த் மைதானம், இந்திய வீரர்களைவிட ஆஸ்திரேலிய வீரர்களுக்கே ஏற்றதாக இருக்கும். ஆனால், ஆஸ்திரேலிய வீரர்கள், தங்களின் தவறுகளில் இருந்து மிகவிரைவாக மீண்டெழ வேண்டும். முதல் போட்டியில் மிகமோசமாக விளையாடிய அவர்கள், மிகக்குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள். அதேநேரம் இந்திய அணி, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் படைத்தவர்கள்’’ என்றார். 

ஆஸ்திரேலிய அணி

தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது முக்கியம் என்று குறிப்பிட்ட பாண்டிங்,``இந்தப் போட்டியில் இருந்து (அடிலெய்டு டெஸ்ட்) சில நேர்மறையான விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி செய்த தவறுகள் குறித்து ஆலோசனை செய்வது, அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட உதவும்’’ என்றார். அடிலெய்டு டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஏமாற்றமளித்த ஆரோன் பின்ச்-க்கு ஆதரவு தெரிவித்த பாண்டிங், ``தேர்வாளர்களோ அல்லது பேட்டிங் ஆர்டர் குறித்து முடிவெடுத்தவர்களோ, ஆஸ்திரேலிய அணிக்காக ஆரோன் பின்ச் தொடக்க வீரராகக் களமிறங்கியிருக்கலாம் என்று நினைத்திருக்கலாம்’’என்றார்.