வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (11/12/2018)

கடைசி தொடர்பு:17:23 (11/12/2018)

`நாட்டின் ஹீரோ அவர்!’ - தோனியைப் புகழும் ரிஷப் பன்ட்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் நாட்டின் ஹீரோ என்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட் புகழாரம் சூட்டியிருக்கிறார். 

தோனி

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரின் முதல் போட்டியை வென்று வரலாறு படைத்திருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்தின் வென்றதன் மூலம் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்தப் போட்டியில் 11 கேட்சுகள் பிடித்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், ஒரு போட்டியில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர் என்ற உலகச் சாதனையை சமன் செய்தார். 

ரிஷப் பன்ட்

இந்தப் போட்டி குறித்தும் விக்கெட் கீப்பராகத் தனது அனுபவங்கள் மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி குறித்து பன்ட் பேசியிருக்கிறார். கடினமான சூழ்நிலைகளை அமைதியாகக் கையாள்வது குறித்து தோனி, தனக்குக் கற்றுக்கொடுத்ததாக பன்ட் பாராட்டியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், ``தோனி, நாட்டின் ஹீரோ. ஒரு மனிதராகவும் கிரிக்கெட்டராகவும் நிறைய விஷயங்கள் அவரிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். எப்போதெல்லாம் அவர் என்னைச் சுற்றி இருக்கிறாரோ, அப்போதெல்லாம் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக உணர்வேன். உங்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்து, அதை அவரிடம் பகிர்ந்தால் அந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு கிடைக்கும். 

ரிஷப் பன்ட்

அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஏற்பட்டது போன்ற கடினமான சூழ்நிலைகளில் ஒரு வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் பொறுமையாக இருந்து, அணியின் வெற்றிக்கு நூறு சதவிகித பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதை தோனி எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்’’ என்றார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 11 கேட்சுகள் பிடித்தது குறித்து பேசியிருக்கும் பன்ட், ``நான் அந்த சாதனை குறித்து சிந்தித்ததில்லை. அதுபோன்ற மைல்கல்லை எட்டுவது சிறப்பானதுதான், ஆனால், அதுகுறித்து நான் அதிகம் சிந்திப்பதில்லை’’ என்று கூறியிருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இணையதளாமன cricket.com.au தளத்துக்குக் கொடுத்த பேட்டியில் இந்தக் கருத்துகளைப் பன்ட் கூறியிருக்கிறார்.