வெளியிடப்பட்ட நேரம்: 06:38 (12/12/2018)

கடைசி தொடர்பு:08:24 (12/12/2018)

`அவர் பௌலிங்கில் தீப்பொறியெல்லாம் பறக்கவில்லை' - மிட்சல் ஸ்டார்க்கை விமர்சித்த ஆஸி கேப்டன்!

மிட்சல் ஸ்டார்க் பௌலிங்கில் தீப்பொறியெல்லாம் ஒன்றும் பறக்கவில்லை என ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

ஸ்டார்க் - டிம் பெய்ன்

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்தது. இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, பெர்த் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதற்கிடையே, முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வியால் ஆஸ்திரேலிய வீரர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தோல்விக்கான காரணங்களை அணி நிர்வாகம் அலசிக்கொண்டிருக்கையில், அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார் ஆஸி கேப்டன் டிம் பெய்ன். 

ஸ்டார்க் - டிம் பெய்ன்

தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்த அவர், ``முதல் போட்டியில் கடுமையாகப் போராடி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியை தழுவியது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. நாங்கள் ஏன் தோற்றோம் என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. எதிர் அணியை முதல் நாள் ஆட்டத்தில் 200 - 210 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என நினைத்தோம். ஆனால், அதில் சறுக்கிவிட்டோம். அதேநேரம் முதல் இன்னிங்ஸில் எங்களால் 235 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஸ்டார்க்  

கூடுதலாக இன்னும் அதிகமாக ரன்கள் எடுத்திருக்க வேண்டும். இதுபோன்ற சில விஷயங்கள் மேம்படுத்த வேண்டியுள்ளது. மிட்சல் ஸ்டார்க் பௌலிங்கில் தீப்பொறியெல்லாம் ஒன்றும் பறக்கவில்லை. நீண்ட நாள்களாகவே அவரின் சிறந்த பந்து வீச்சுக்கும் மோசமான பந்து வீச்சுக்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கிறது என நான் நினைக்கிறேன். இந்த காலகட்டங்களில் ஒவ்வொரு நாளும் அவரைப் பார்த்து வருகிறேன். அவர் உண்மையாகவே சிறந்த ஃபார்மில்தான் இருக்கிறாரா என்றால் நிச்சயமாக கிடையாது. 

மிட்சல் ஸ்டார்க்

அவர் சிறந்த பார்மில் இல்லை. ஆனாலும் தொடர்ந்து அவர் தன் பங்கை ஆற்றி வருகிறார்" என்றார். முன்னதாக இரண்டு இன்னிங்ஸிலும் ஓப்பனிங் சொதப்பியதால் அடுத்த போட்டியில் ஓப்பனிங்கில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ``கோச் லாங்கர் இதில் என்ன கூறுகிறார் என்று பார்க்க வேண்டும். அதன்பிறகே பெர்த் போட்டியில் மாற்றம் குறித்து யோசிக்க முடியும். அவர் முடிவு எடுத்தால் கண்டிப்பாக பெர்த்தில் மாற்றம் இருக்கும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க