‘கோலியை அச்சுறுத்தும் வில்லியம்ஸ்’- ஆஸியில் கவனம் வேண்டும் ரன் மெஷின் | Virat Kholi Comes Under New Threat

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (12/12/2018)

கடைசி தொடர்பு:21:06 (12/12/2018)

‘கோலியை அச்சுறுத்தும் வில்லியம்ஸ்’- ஆஸியில் கவனம் வேண்டும் ரன் மெஷின்

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் விராட் கோலி, ஐசிசி-யின் டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தில் ஒட்டுமொத்த இந்திய வீரர்களும் சரண்டர் ஆனபோதும், கோலி தனி ஆளாக ஜொலித்தார். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா தொடர்களிலும் கோலி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம், ஐசிசி  டெஸ்ட் பேட்ஸ்மேன்களின்
தரநிலையில் முதலிடம் பிடித்தார். கோலிக்கு சவால் விடுக்கும் போட்டியாளராக இருந்தது ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவன் ஸ்மித் தான். கோலி, சிறந்த வீரரா அல்லது ஸ்மித் சிறந்த வீரரா என சமூக வலைதளத்தில் அவர்களது ரசிகர்கள் யுத்தமே செய்துவந்தனர். முன்னாள் வீரர்கள் சிலர், ஸ்மித் மற்றும் கோலியின் பேட்டிங் மற்றும் நடத்தைகள் குறித்து ஒப்பீடு செய்துவந்தனர். இருவரில் சிறந்த கேப்டன் யார் என்பது போன்ற விவாதங்களும் அரங்கேறிவந்தன. 

ஸ்மித்

இதுகுறித்து, கடந்த ஆண்டு நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவிக்கையில், கோலி எக்ஸ்பிரஸ் வேகத்தில் விளையாடக்கூடிய ஒருநாள் தொடரிலும், ஸ்மித் பேசஞ்சர் ரயில்போல் மெதுவாக விளையாடப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பானவர்கள் என்றார். இந்நிலையில்தான், பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஸ்மித்துக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில், கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனி ராஜாங்கத்தையே நடத்தினார்.ஒரு நாள் போட்டியில் 10,000 ரன்களை கடந்தது, ஒரு வருடத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர், ஆஸ்திரேலியா மண்ணில் தொடக்கப் போட்டியில் வெற்றி என சாதனைகளைக் குவித்தார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது.

கோலி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், கோலி பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இரண்டு இன்னிங்ஸில் முறையே 3, 34 ரன்களில் அவுட்டானார். இதனால், தரநிலையில் 15 புள்ளிகள் சரிந்தன. இருப்பினும், 920 புள்ளிகளுடன் கோலி முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, கேன் வில்லியம்சன் 913 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், முறையே 89,139 ரன்கள் வில்லியம்ஸ் குவித்தார். இதன்மூலம், நியூஸிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.  வில்லியம்ஸின் கிரிக்கெட் வாழ்வில் இது, சிறந்த நிலையாகும்.

கேன் வில்லியம்ஸ்

கோலி, இனிவரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டால், அவரது முதலிடத்துக்கு ஆபத்து இருக்காது. ஆஸ்திரேலியாவில் கோலி ஜொலிக்கத் தவறினால், கேன் வில்லியம்சன் அந்த அரியணையில் அமர்வார். நியூஸிலாந்து அணி, அடுத்து இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.