``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்!” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ் | Dhoni must play domestic cricket - Amarnath

வெளியிடப்பட்ட நேரம்: 21:32 (12/12/2018)

கடைசி தொடர்பு:21:32 (12/12/2018)

``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்!” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்

'இந்திய அணியில் உள்ள முன்னணி வீரர்கள், உள்ளூர் போட்டிகளில் அதிகம் விளையாடுவதில்லை' என முன்னாள் வீரர் அமர்நாத் தெரிவித்துள்ளார். 

தோனி


இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன. தோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டதால், அவர் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடிவருகிறார். ஆஸ்திரேலியாவில், இந்திய அணி முதலில் டி-20 போட்டிகளில் விளையாடியது. டி-20 கிரிக்கெட் தொடரில் இருந்து தோனி அதிரடியாக கழற்றிவிடப்பட்டார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்பொருட்டு தோனி இந்தப் போட்டியில் சேர்க்கப்படவில்லை எனத் தேர்வுக்குழுத் தலைவர் எம்.கே.பிரசாத் தெரிவித்தார். தற்போது, உள்ளூர் தொடரான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய அணி வீரர்கள் பெரும்பாலும் விளையாடுவதில்லை. அணியில் இருந்து ஓரம் கட்டப்படும்போதுதான் அதில் கவனம் செலுத்துகின்றனர்.

தோனி

இந்த ஆதங்கத்தைத்தான் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் அமர்நாத் பேசியுள்ளார். ``ஒவ்வொரு வீரரும் வித்தியாசமானவர்கள். ஆனால், நீங்கள் இந்திய அணியில் விளையாடவேண்டும் என்றால், முதலில் உங்கள் மாநில அணிக்காக விளையாட வேண்டும். நிறைய சீனியர் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது இல்லை. பிசிசிஐ கிரிக்கெட் விதிகளை மாற்ற வேண்டும். நீங்கள் ஒரே விதமான போட்டிகளில் விளையாடினாலும் பரவாயில்லை. உள்ளூர் போட்டிகளில் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடுங்கள்”என்றார்.
 
நடப்பு ஆஸ்திரேலியா தொடர்குறித்துப் பேசியவர், ஆஸ்திரேலியா அணியில் டாப் வீரர்கள் இல்லை. அவர்கள் புதிய அணியை கட்டமைத்துவருகின்றனர். கிரிக்கெட் கண்ணோட்டத்தில் அணுகினால், முதல் டெஸ்ட் அற்புதமான ஒன்று. புஜாரா அணியில் இருப்பது கூடுதல் பலம். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எவ்வளவு ஆக்ரோஷமாக விளையாடுவது என்பது இல்லை. நீங்கள் எவ்வளவு நேரம் க்ரீஸை ஆக்கிரமித்து இருக்கின்றனர் என்பதுதான் முக்கியம் எனக் கூறினார்.