`என் கிரிக்கெட் வாழ்க்கையைக் காப்பாற்றியவர் லட்சுமண்’ - கங்குலி ஓப்பன் டாக் | Ganguly open talk about laxman in kolkata

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (13/12/2018)

கடைசி தொடர்பு:09:15 (13/12/2018)

`என் கிரிக்கெட் வாழ்க்கையைக் காப்பாற்றியவர் லட்சுமண்’ - கங்குலி ஓப்பன் டாக்

வி.வி.எஸ் லட்சுமண், தன் கிரிக்கெட் வாழ்க்கையைக் காப்பாற்றியவர் எனப் புகழ்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி. 

கங்குலி

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் நாளை பெர்த்தில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி தற்போது பலமில்லாத அணியாக உள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியா அணி உச்ச ஃபார்மில் இருந்த காலத்தில், அந்த அணிக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் இந்தியாவின் லட்சுமண். 

குறிப்பாகக் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 2001-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியை இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல, ஆஸ்திரேலிய ரசிகர்களாலும் மறக்க முடியாது. முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் லட்சுமண் மற்றும் டிராவிட்டின் அபார ஆட்டத்தினால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 

லட்சுமண் டிராவிட்

 

லட்சுமணின்  ‘281 அண்ட் பியாண்ட்’  என்ற சுயசரிதை புத்தகத்தின்  கொல்கத்தா வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, அந்தப் போட்டி குறித்து தன் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தார்.   

நிகழ்ச்சியில் பேசிய கங்குலி,  ``இந்தப் புத்தகத்தில் தலைப்பு தவறான ஒன்றாகும். நியாயமாக, இந்தப் புத்தகத்துக்கு ‘281 and beyond, and saved Sourav Ganguly's career’ என்று தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். ஆம், அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதால் இந்தியா அணியை மட்டும் அவர் காப்பாற்றவில்லை. என் கிரிக்கெட் வாழ்க்கையும் காப்பாற்றினார். லட்சுமண் மாதிரியான வீரர் எனது அனைத்து அணியிலும் இருக்க வேண்டும் என விரும்புவேன். 

281

ஒரு கேப்டனாக நான் எடுக்கும் முடிவுகள் சில நேரங்கள் சரியாகவும் சில நேரங்களில் தவறாகவும் இருந்திருக்கிறது. 2003 உலகக்கோப்பையில் அவர் இருந்திருந்தால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறும் வாய்ப்பு இருந்திருக்கும் என நினைக்கிறேன். அவர் அப்படியான வீரர். அவர் இருக்கும் அணி பலவீனமான அணியாக இருக்காது” என்றார். 

இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளராக ஜாகீர் கானும் கலந்துகொண்டார்.