வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (14/12/2018)

கடைசி தொடர்பு:12:45 (14/12/2018)

``100 ரன்னுக்கு ரூ.2.80 கோடியா.. வேண்டவே வேண்டாம்!”- கம்பீர் சொல்லும் லாஜிக்

இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர், கடந்த ஐ.பி.எல் தொடரில் தனது செயல்பாடு குறித்து வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார். 

கம்பீர்

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கம்பீர், சமீபத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணி 2007 மற்றும் 2011 -ம் ஆண்டுகளில் உலகக்கோப்பைத் தொடரை வென்றதில் முக்கியப் பங்காற்றினார். சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்லாது ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக இரண்டு கோப்பைகளை கைப்பற்றிக் கொடுத்தார். 

கொல்கத்தா

ஏழு வருடங்களாக கொல்கத்தா அணியில் பயணித்த அவர், கடந்த வருடம் ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்காகக் களமிறங்கினார். அந்த அணியின் கேப்டனாகவும் அவர் அறிவிக்கப்பட்டார். இதுவரை எந்தத் தொடரிலும் அதிகம் ஜொலிக்காத டெல்லி அணி, கம்பீர் தலைமையில் கலக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி அணி முதல் பாதியில் சிறப்பாக விளையாடவில்லை. தொடர் தோல்விகளால் துவண்டது. அப்போது அதிரடியான சில முடிவுகளை எடுத்தார் கம்பீர். தொடரின் நடுவில் தனது கேப்டன் பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஸ்ரேயஸ் ஐயரிடம் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. சில போட்டிகளில் அவர் விளையாடவும் இல்லை.  

ஸ்ரேயஸ் -கம்பீர்

அப்போது பேசிய கம்பீர், ``இந்தத் தொடரில் விளையாட தனக்குச் சம்பளம் தேவையில்லை” என்றார் அதிரடியாக. அப்போது இந்தத் சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. கம்பீர், தனக்கு மனதில்பட்டதை அப்படியே பேசக் கூடியவர். அவர் செய்வது சரியான ஒன்று தான் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டினர் ரசிகர்கள். 

 

இந்நிலையில் தற்போது, அந்தச் சம்பவம் தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார். ஸ்போர்ட்ஸ் டாக் என்னும் ஊடகத்துக்கு அளித்த  பேட்டியில்,  ``கடந்த வருடம் நான் ரூபாய் 2.80 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டேன். நான் அடித்த 100 ரன்களுக்கு இது அதிகம் என நான் உணர்ந்தேன். அந்தப் பணத்தை வேண்டாம் எனச் சொல்ல நான் ஒன்றும் கடவுள் இல்லை. ஆனால் அந்தப் பணம் எனக்கானது அல்ல. நான் வீரராகவும், கேப்டனாகவும் செயல்படவில்லை. 

அணிக்குத் தேவையானவற்றை நான் செய்திருந்தால், அந்தப் பணத்தை நான் பெற்றிருப்பேன். நான் சிறப்பாக விளையாடாமல் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டால், வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் வாழ வேண்டி இருக்கும். எந்த விஷயத்திலும் இதயம் சொல்வதைக் கேட்டு நடந்தால் ஒரு தெளிவு கிடைக்கும். அதனால் மனதில் பட்டத்தை அப்படியே செய்தேன். என் மனதில் நான் அந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்படவில்லை எனத் தோன்றியது” என்றார்.