வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (14/12/2018)

கடைசி தொடர்பு:21:52 (14/12/2018)

`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்!

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கும், சக வீரர் பாருபள்ளி காஷ்யப்புக்கும் திருமணம் நடந்துள்ளது. தனது திருமண புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சாய்னா நேவால்


இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையாகத் திகழ்பவர், சாய்னா நேவால். கடந்த 2012-ம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். பேட்மின்டன் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்தவர், சாய்னா. அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளை வாங்கிய இவர், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த சாய்னா, தனது சக பேட்மின்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ``இது தான் என் வாழ்வில் சிறந்த ஆட்டம்” என்று குறிப்பிட்டுள்ளார். இருவரும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இன்று திருமணம் நடந்துள்ளது.

சாய்னா

இது தொடர்பாக சாய்னா,  ``2007-08 ம் ஆண்டுதான் நாங்கள் அறிமுகமானோம். டோர்னமென்டுகளை ஒன்றாக விளையாடியுள்ளோம். ஒன்றாக பயிற்சிபெற்றுள்ளோம். இருவரின் விளையாட்டிலும் கவனம் செலுத்தியுள்ளோம். போட்டி மயமான இந்த உலகில், ஒருவருடன் நெருக்கமாகப் பழகுவது என்பது கடினமானது. எப்படியோ நெருக்கம் எங்களுக்குள் சாத்தியமானது. படிப்படியாக எங்கள் நட்பு வளர்ந்தது. அப்போது நாங்கள், திருமணம்குறித்து யோசித்துப் பார்த்ததில்லை. நாங்கள் டோர்னமென்ட்டை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தோம்.

நாங்கள் இருவரும் பெரும்பாலும் இணைந்தே பயணித்தோம். இதை என் பெற்றோரும் அறிந்திருந்தனர். ஆகவே, என் விருப்பத்தை நான் கூறவேண்டிய தேவை  எழுவில்லை. அவர்களே என் விருப்பத்தைப் புரிந்துகொண்டனர்” என்றார். டிசம்பர் 20-ம் தேதியிலிருந்து ப்ரீமியர் பேட்மின்டன் லீக் ஆரம்பிக்கிறது. அதன் பின், டோக்யோ போட்டிக்கான தகுதிப் போட்டிகள் வருகின்றன. இந்நிலையில், இவர்களின் திருமணம் 16-ம் தேதி நடைபெறும் எனக் கூறப்பட்டது. முன்னதாகவே, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து சாய்னா - காஷ்யப் திருமண வரவேற்பு, விளையாட்டு, அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்க, ஹைதராபாத் நகரில் டிசம்பர் 16 அன்று, பிரமாண்டமாக நடைபெற உள்ளது.