வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (15/12/2018)

கடைசி தொடர்பு:16:05 (15/12/2018)

கோலி கிளாசிக்; ரஹானே இஸ் பேக்! - பெர்த் டெஸ்டில் மீண்டெழுந்த இந்திய அணி #AUSvIND

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸின் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்துள்ளது. 

விராட் கோலி

Photo Credit: BCCI

ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, 49 ரன்களுக்குக் கடைசி 4 விக்கெட்டுகளை இழந்தது. கம்மின்ஸ் 19 ரன்களிலும் கேப்டன் டிம் பெய்ன் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்டார்க் 6 ரன்களிலும் ஹஸல்வுட் ரன் எதுவும் எடுக்காமலும் இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் வெளியேறினர். இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளும், பும்ரா, உமேஷ் யாதவ் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

விராட் கோலி - ரஹானே

Photo Credit: BCCI

இதையடுத்து, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை முரளி விஜய் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடங்கினர். இந்திய அணி, 8 ரன்கள் சேர்ப்பதற்குள் தொடக்க வீரர்களை இழந்தது. விஜய் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்துவீச்சிலும், கே.எல்.ராகுல் 2 ரன்களுடன் ஹஸல்வுட் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து புஜாராவுடன் 3வது விக்கெட்டுக்குக் கைகோத்த கேப்டன் கோலி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 103 பந்துகளை எதிர்க்கொண்ட புஜாரா 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கோலியுடன் இணைந்து அவர், 3வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தார். அடுத்துவந்த துணைக் கேப்டன் ரஹானே, கோலியுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்க்கொண்ட இந்த ஜோடி நிதானமாக ரன் குவித்தது. மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறாத இந்த ஜோடி, இரண்டாவது நாளில் இந்திய அணி மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்துக்கொண்டது.

விராட் கோலி

Photo Credit: BCCI

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. கோலி 82 ரன்களுடனும் ரஹானே 51 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், ஹஸல்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 154 ரன்கள் பின்தங்கியுள்ளது.