அசத்தல் சதம்; புதிய சாதனை - ஆஸி., வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கோலி! | india scored 283 against australia

வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (16/12/2018)

கடைசி தொடர்பு:12:07 (16/12/2018)

அசத்தல் சதம்; புதிய சாதனை - ஆஸி., வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கோலி!

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸின் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283  ரன்கள் சேர்த்துள்ளது. 

கோலி

ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, 49 ரன்களுக்குக் கடைசி 4 விக்கெட்டுகளை இழந்தது. கம்மின்ஸ் 19 ரன்களிலும் கேப்டன் டிம் பெய்ன் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்டார்க் 6 ரன்களிலும் ஹஸல்வுட் ரன் எதுவும் எடுக்காமலும் இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் வெளியேறினர். இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளும், பும்ரா, உமேஷ் யாதவ் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

கோலி

இதையடுத்து, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை முரளி விஜய் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடங்கினர். இந்திய அணி, 8 ரன்கள் சேர்ப்பதற்குள் தொடக்க வீரர்களை இழந்தது. விஜய் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்துவீச்சிலும், கே.எல்.ராகுல் 2 ரன்களுடன் ஹஸல்வுட் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து புஜாராவுடன் 3வது விக்கெட்டுக்குக் கைகோத்த கேப்டன் கோலி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 103 பந்துகளை எதிர்க்கொண்ட புஜாரா 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

கோலியுடன் இணைந்து அவர், 3வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தார். அடுத்துவந்த துணைக் கேப்டன் ரஹானே, கோலியுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்க்கொண்ட இந்த ஜோடி நிதானமாக ரன் குவித்தது. இருப்பினும் மூன்றாவது நாளான இன்று, நாதன் லியான் பந்துவீச்சில் ரஹானே ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து கோலியுடன் ஹனுமன் விஹாரி கைகோர்த்தார். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய கோலி சதமடித்து, ஆஸி.,வீரர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். இதன்மூலம் சர்வதே டெஸ்ட் அரங்கில் விராட் கோலி அடிக்கும் 25-வது சதமும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் அடிக்கும் 6-வது சதம் இதுவாகும்.

ஆஸ்திரேலியா

2012-ம் ஆண்டு ஒரு சதமும், 2014-ம் ஆண்டு 4 சதமும் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், டெஸ்ட் போட்டியில் மிகவேகமாக 25 சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் விராட் கோலி ஆவார். சர்வதேச அளவில் டான் பிராட்மேனுக்கு அடுத்தார்போல் 2-வது வீரர் விராட் கோலி உள்ளார். விராட் கோலி 128 இன்னிங்ஸ் 76 போட்டிகளில் தனது 25-வது சத்தை எட்டியுள்ளார். பிராட்மேன் 52-வது போட்டியில் 25-வது சதம் அடித்தார்.  இந்திய அளவில் சச்சின் டெண்டுல்கர் 130 இன்னிங்ஸில் தனது 25-வது சதத்தை எட்டி இருநதார். தொடர்ந்து ஆடிய கோலி கம்மின்ஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காததால் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்களை சேர்த்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி 43 ரன்கள் பின்தங்கியுள்ளது.