`16 ஓவர்களிலேயே முடிந்த மேட்ச்' - பெர்த் டெஸ்டில் இந்தியா தோல்வி!  | Australia won by 146 runs in 2nd test against india

வெளியிடப்பட்ட நேரம்: 09:07 (18/12/2018)

கடைசி தொடர்பு:09:35 (18/12/2018)

`16 ஓவர்களிலேயே முடிந்த மேட்ச்' - பெர்த் டெஸ்டில் இந்தியா தோல்வி! 

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 326 ரன்களும் இந்திய அணி 283 ரன்களும் எடுத்தன. இதையடுத்து, 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 93.2 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முகமது ஷமி 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 

ஆஸ்திரேலிய

photo credit:@BCCI

சவாலான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வழக்கம்போல் ஏமாற்றம் அளித்தார். அவர் ஆட்டமிழந்த சிறிதுநேரத்திலேயே புஜாராவும் 4 ரன்களில் வெளியேற, 13 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. மூன்றாவது விக்கெட்டுக்குக் கைகோத்த தொடக்க வீரர் முரளி விஜய் மற்றும் கோலி ஜோடி நீண்டநேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். விஜய் 20 ரன்களும் விராட் கோலி 17 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா

photo credit:@BCCI

இதையடுத்து, 5வது விக்கெட்டுக்கு துணை கேப்டன் ரஹானே மற்றும் ஹனுமா விஹாரி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்தது. நான்காவது நாள் முடிய சில ஓவர்கள் மீதமிருந்த நிலையில், ரஹானே 30 ரன்களில் ஆட்டமிழந்தனர். 4வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் சேர்ந்திருந்தது. விஹாரி 24 ரன்களுடனும் பன்ட் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 175 ரன்கள் தேவை என்னும் நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டத்தை இருவரும் தொடங்கினர். ஆட்டம் தொடங்கி 7 ரன்கள் சேர்ப்பதற்குள்ளாகவே, ஸ்டார்க் பந்துவீச்சில் 28 ரன்கள் எடுத்த நிலையில் விஹாரி நடையைக் கட்டினார். 

பன்ட்

photo credit:@BCCI

மறுமுனையில் இருந்த பன்ட் விரைவாக ரன்கள் சேர்க்க முற்பட்டார். ஆனால், 30 ரன்கள் எடுத்தபோது லயன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த டெயிலண்டர்கள் சொதப்ப இந்தியா 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 - 1 என்ற சமநிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், லயன் தலா மூன்று விக்கெட்டுகளும், ஹேசல்வுட் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய வீரர்கள் சில மணி நேரங்கள் தாக்குபிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் தொடங்கி 16 ஓவர்களிலேயே ஐந்து விக்கெட்டுகளையும் இழந்ததால் மேட்ச் முடிந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க