வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (18/12/2018)

கடைசி தொடர்பு:14:25 (18/12/2018)

`இனி அதைப் பேசி பலனில்லை' - டெஸ்ட் தோல்வியால் `விராட் கோலி' விரக்தி

நாம் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கவில்லை என்றால் சாதனை பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட 30 ரன்களைத் தாண்டவில்லை. பாட்னர்ஷிப்பிலும் இதே நிலைதான். இதனால் இந்திய வீரர்கள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கிடையே, பெர்த் டெஸ்ட் வெற்றியின் மூலம் 9 மாதங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியை ருசித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. அதேபோல் டிம் பெயின் தலைமையில் ஆஸ்திரேலியா பெறும் முதல் வெற்றி இது. இந்த வெற்றியால் ஆஸ்திரேலிய வீரர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

கோலி

இந்த நிலையில், போட்டியின் முடிவில் தோல்வி குறித்து இந்தியக் கேப்டன் கோலி பேசியுள்ளார். அதில், ``ஒரு அணியாக நாங்கள் நன்றாக விளையாடினோம் என நினைக்கிறேன். ஆனால் எங்களைவிட ஆஸ்திரேலிய வீரர்கள் நன்றாகவே விளையாடினார்கள். இந்த பிட்சில் ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் எடுக்கவிட்டு விட்டோம். இது தவறானதாக முடிந்துவிட்டது. இந்த வெற்றிக்கு அவர்கள் உரித்தானவர்களே.  பிட்சை முதலில் பார்த்தபோது ஸ்பின்னர் தேவையில்லை என்றே நினைத்தோம். அதனாலேயே ஜடேஜாவை எடுக்காமல் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினோம். அதற்கேற்ப பாஸ்ட் பௌலர்கள் சிறப்பாகப் பந்துவீசினர். தற்போதுள்ள பௌலர்கள் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தற்போது உள்ளதைப் போன்றே எதிர்காலத்திலும் பௌலர்கள் அணியைக் கட்டமைக்க வேண்டும்.

விராட் கோலி

அதேநேரம் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன் சிறப்பாகப் பந்துவீசினார். இப்படிப்பட்ட ஒரு பிட்சில் அவரது ஸ்டைலில் பந்துவீசி நெருக்கடி கொடுத்தார். அவர் எட்டு விக்கெட்டுகள் எடுத்தது சரிவுக்கு ஒரு காரணம்" என்றவரிடம், முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கோலி, ``எப்போது நாம் அடிக்கும் சதம் அணியின் வெற்றிக்கு உதவவில்லை என்றால் அதை முன்னிலைப்படுத்த வேண்டியதில்லை. நாம் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கவில்லை என்றால் சாதனை பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை. பேசியும் பலனில்லை. நான் இப்போது அடுத்த டெஸ்டில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்" என்று விரக்தியாகக் கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க