வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (18/12/2018)

கடைசி தொடர்பு:21:11 (18/12/2018)

ஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்! #LiveUpdates #IPL

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ருட்டுராஜ் கைக்வாட் என்னும் இளம் பேட்ஸ்மேனை சென்னை அணி ரூ. 20 லட்சத்துக்கு வாங்கியுள்ளது. 21 வயதான இவர் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி வருகிறார்.

ருட்டு

Photo:Wikipedia

ஐ.பி.எல் ஏலத்தில் முதல் சுற்றில் எந்த அணியாலும் கண்டுகொள்ளப்படாத யுவராஜ் சிங், இரண்டாவது சுற்றில் தனது அடிப்படை விலையான ரூ 1 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார்.  

யுவராஜ்

ஐ.பி.எல் ஏலத்தில் ப்ரப்சிம்ரன் சிங் என்ற இளம் வீரரை பஞ்சாப் அணி ரூ 4.80 கோடிக்கு வாங்கியுள்ளது. இவர் இதுவரை டி20 போட்டிகளில் விளையாடாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிந்தர் ஸ்ரன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ. 3.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.  இவரை எடுக்க சென்னை அணியும் முயற்சி செய்தது.

இங்கிலாந்து அணியின் இளம் ஆல் ரவுண்டர் சாம் குர்ரான், அதிக விலை ஏலத்தில் எடுக்கப்பட்டார். பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணி அவரை எடுக்க அதிக ஆர்வம் காட்டியது. இறுதியில் பஞ்சாப் அணி அவர் ரூ 7.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. கடந்த இங்கிலாந்து தொடரின் போது இந்திய அணிக்கு எதிராகச் சிறப்பாக பந்து வீசினார்  குர்ரான்.  

நியூசிலாந்து வீரர் காலின் இன்கிராமை ஏலத்தில் எடுக்க அணிகள் அதிக ஆர்வம் காட்டினர். இறுதியில் டெல்லி அணி அவர் ரூ 6.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ், இந்த முறை எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.  

மன்னன் வோரா, சச்சின் பேபி, அன்கீட் உள்ளிட்ட வீரர்களை வங்க எந்த  அணியும் ஆர்வம் காட்டவில்லை. சர்ப்ராஸ் கான் ரூ 25 லட்சத்துக்குப் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். தமிழக வீரர் முருகன் அஷ்வின் ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை. 

ஐ.பி.எல் ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ரூ 20 லட்சத்தில் தொடங்கிய ஏலம் ரூ 8.40 கோடிக்கு முடிவுக்கு வந்தது. அவரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. தமிழக வீரரான இவர் டி.என்.பி.எல் வில் மதுரை அணிக்காக விளையாடியவர்.   

வருன்

Photo: TNPL

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்துவீச்சளரான மோகித் ஷர்மாவை ரூ. 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. முன்னதாக ஷமியை வாங்க முயற்சி செய்த சென்னை, தற்போது மோகித் ஷர்மாவை வாங்கியுள்ளது. சென்னை இன்னும் ஒரு வீரரைத்தான் எடுக்க முடியும். 

இலங்கை வீரர் மலிங்கா தனது அடிப்படை விலையான 2 கோடிக்கு மும்பை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான முமகது ஷமி பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவர் ரூ 4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 

ஷமி

கடந்த ஐ.பி.எல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம்போன உனகட்-க்கு இந்த முறையும் அதிக கிராக்கி இருந்தது. தொடக்கத்தில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் உனத்கட்டை வாங்க அதிக ஆர்வம் காட்டினர். பஞ்சாப் ராஜஸ்தான் அணிகளும் இந்த ஏலத்தில் இணைந்துகொண்டன. இறுதியில் ராஜஸ்தான் அணி ரூ. 8.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இங்கிலாந்தின் ஜானி பெயர்ஸ்டோ ஹைதராபாத் அணியால் ரூ. 2.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் ஹெண்ட்ரிக்ஸ் அவரது அடிப்படை விலையான ரூ. 1 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். 

ரூ. 5 கோடிக்கு ஏலம்போன அக்ஸர் பட்டேல்!

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்ஸர் பட்டேல் ரூ, 5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 

யுவராஜ் சிங்!

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் இந்த ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. அவரது அடிப்படை விலையான ரூ. 1 கோடிக்கும் வாங்க அணிகள் ஆர்வம் காட்டவில்லை. 

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை வாங்க அணிகள் ஆர்வம்!

முன்னதாக வெ.இ அணியின் ஹெட்மெயர் 4.2 கோடி ரூபாய்க்கு ஏலம்போன நிலையில் தற்போது அந்த அணியின் பரத்வைத் ரூ. 5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவரை கொல்கத்தா அணி வாங்கியது.

 

விலை போகாத மெக்கல்லம்!


நியூசிலாந்து அணியின் அதிரடி வீரரான பிரண்டன் மெக்கல்லம், இந்த முறை எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. அதேபோன்று சக நாட்டு வீரரான கப்திலை வாங்கவும் அணிகள் ஆர்வம் காட்டவில்லை. 

மெக்கல்லம்

கடந்த இந்திய சுற்றுப்பயணத்தின்போது அதிரடியாக விளையாடிய வெ.இ வீரர் ஹெட்மெயரை வாங்க கடும் போட்டி நிலவியது. ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் இவரை வாங்க அதிக ஆர்வம் காட்டியது. இறுதியில் பெங்களூரு அணி ஹெட்மெயரை ரூ. 4.2 கோடிக்கு வாங்கியது. 

தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வரும் இந்திய வீரரான ஹனும விகாரி்யை வாங்க கடும் போட்டி நிலவியது. ரூ. 50 லட்சத்தில் தொடங்கிய ஏலம் 2 கோடியில் முடிந்தது. அவரை வாங்க டெல்லி மற்றும் மும்பை அணிகள் அதிக ஆர்வம் காட்டின. இறுதியில் டெல்லி அணி அவரை சொந்தமாக்கியது. 

விஹாரி

ஏலத்தில் முதல் வீரராக மனோஜ் திவாரி பெயர் அறிவிக்கப்பட்டது. அவரது அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்கு ஏலம் தொடங்கியது. ஆனால், அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்திய அணியின் புஜாராவையும் வாங்க அணிகள் ஆர்வம் காட்டவில்லை.  

2019-ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. 

ஐபிஎல்

Photo: Twitter/IPL

12 வது ஐ.பி.எல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெறவுள்ளது. இதே சமயத்தில் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த பொதுத்தேர்தலின்போது ஐ.பி.எல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அதனால் இந்த முறை போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளது என்பதில் குழப்பம் நிலவிவருகிறது. 

ஏலம்

Photo: Twitter/IPL

அதற்கு முன்பாக ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்கள் தங்கள் பழைய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கம்பீர் ஓய்வு அறிவித்துள்ளார். மேலும், தவான் உள்ளிட்டோர் அணிகள் மாறியுள்ளனர். கடந்த சில நாள்களாக யுவராஜ் சிங் சென்னை அணிக்காக வாங்க வேண்டும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்படியான பல்வேறு சூழ்நிலைகளுக்கு நடுவே இந்த ஏலம் நடைபெறுகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ்

முன்னதாக யுவராஜ் சிங், அக்ஸர் படேல் ஆகியோரின் அடிப்படை விலை ரூ.1 கோடி எனவும், 2 கோடி ரூபாய் அடிப்படை விலையில் பிரெண்டன் மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், ஷான் மார்ஷ், மலிங்கா உட்பட 10 வீரர்கள் உள்ளனர். இதில், இந்தியர் ஒருவர்கூட இடம்பிடிக்கவில்லை. அதேபோல், கடந்த தொடரில் 11 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தமான ஜெயதேவ் உனத்கட்-டின் அடிப்படை விலை அதிகபட்சமாக 1.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

ஐ.பி.எல்

இந்த ஐ.பி.எல் ஏலத்தில் மொத்தம் 1,003 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். தற்போது ஏலத்தில் 351 வீரர்கள் உள்ளனர். இதில் 228 பேர் இந்திய வீரர்கள். 123 பேர் வெளிநாட்டினர். பஞ்சாப் அணி அதிகபட்சமாக ரூ. 36.3 கோடி வரை செலவிட முடியும். பஞ்சாப் அணிக்கு அடுத்த இடத்தில் டெல்லி அணி உள்ளது. புதிதாக டெல்லி கேப்பிடல்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள டெல்லி அணி அதிகபட்சமாக ரூ. 25.5 கோடி செலவிட முடியும். இருப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறைந்தபட்சமாக ரூ 8.4 கோடி செலவிட முடியும்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க