வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (18/12/2018)

கடைசி தொடர்பு:19:14 (18/12/2018)

ரூ.8.4 கோடிக்கு ஏலம்போன தமிழக வீரர்! - `மிஸ்ட்ரி ஸ்பின்னர்’ வருண் சக்கரவர்த்தி

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுத்திருக்கிறது அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. 

வருண் சக்கரவர்த்தி

ஐ.பி.எல் தொடரில் 12 வது சீஸனுக்கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் சர்வதேச போட்டிகளில் களமிறங்காத தமிழகக் கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு, 20 லட்சம் என்ற அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவரது பெயர் அறிவிக்கப்பட்டதும், சென்னை மற்றும் டெல்லி அணிகள் ஆர்வம் காட்டின. இரு அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி, வருண் சக்கரவர்த்திக்காக ரூ.3 கோடி வரை சென்றது. டெல்லி அணி, ஏலத்துக்கான தொகையை ரூ.3.4 கோடி வரை ஏற்றியது. மொத்தத் தொகையான ரூ.8.4 கோடியில், மோஹித் ஷர்மாவை ரூ.5 கோடிக்கு எடுத்துவிட்டதால், சென்னை அணியிடம் இருந்த கையிருப்புத் தொகையைவிட ஏலத்தொகை அதிகரித்தது.

இதனால், சென்னை அணி பின்வாங்கியது. இதையடுத்து டெல்லி அணியுடன் ஏலத்துக்கான போட்டியில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ரூ.4.8 கோடி வரை ஏலம் கேட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நெட் பௌலராக இருக்கும் வருண் சக்கரவர்த்தியை ஏலம் எடுப்பதில் கடைசி நேரத்தில் ஆர்வம் காட்டிய கொல்கத்தா அணி, ரூ.5 கோடியாக ஏலத்தொகையை உயர்த்தியது. இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ரூ.8.4 கோடி என்ற விலையில் வருண் சக்கரவர்த்தியை ஏலம் எடுத்தது. 

 

யார் இந்த வருண் சக்கரவர்த்தி?

டி.என்.பி.எல் தொடரில் மதுரை பேந்தர்ஸ் அணிக்காக வருண் சக்கரவர்த்தி விளையாடி வருகிறார். கடந்த தொடரில் மதுரை அணி, தனது முதல் டி.என்.பி.எல் கோப்பையைக் கைப்பற்ற முக்கியக் காரணமாக இருந்தார். இதன்மூலம் லைம் லைட்டுக்கு வந்த அவர், கடந்த ஐ.பி.எல் தொடரின்போது சென்னை மற்றும் கொல்கத்தா அணி வீரர்களின் வலைபயிற்சியின்போது பந்துவீசினார். 

வருண் சக்கரவர்த்தி


கடந்த 2013-ம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடிவருவதாகக் கூறும் வருண், 17 வயது வரை தான் விக்கெட் கீப்பராக இருந்ததாகவும், பின்னர் வேகப்பந்துவீச்சாளராக மாறியதாகவும் கூறுகிறார். சென்னையின் பிரபல தனியார் கல்லூரியில் ஆர்கிடெக்ட் படித்துவிட்டு 2 ஆண்டுகளாகப் பணியாற்றிய பின்னர், கிரிக்கெட் மீதான ஆர்வம் காரணமாக மீண்டும் தனது கவனத்தைக் கிரிக்கெட் பக்கம் திருப்பியிருக்கிறார். டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய அவர், கல்லூரி படிப்பை முடித்த பின்னர் வேகப்பந்துவீச்சாளராக கிளப் அணிக்காக விளையாடியிருக்கிறார்.

 

 

காயம் காரணமாக ஏற்பட்ட 6 மாத இடைவெளிக்குப் பின்னர், சுழற்பந்துவீச்சாளராக மாறியிருக்கிறார். தன்னால் 18 வேரியேஷன்களில் பந்துவீச முடியும் என்று கூறும் வருண், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் கழித்த நாள்கள் தனது கரியரின் முக்கியமான நாள்கள் என்கிறார். பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், சுனில் நரைன் போன்ற சுழற்பந்துவீச்சாளர்களிடம் நேரம் செலவிட்டது மறக்கமுடியாதது. கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், தன்னை அங்கே அழைத்துச் சென்றதாகத் தெரிவித்தார். 

கடந்த டி.என்.பி.எல் தொடரில் தன்னை மிகவும் கவர்ந்த வீரர் என வருண் சக்கரவர்த்தியைப் பாராட்டியிருக்கும் சென்னை அணியின் முன்னாள் வீரர் மைக் ஹஸி, `நெருக்கடியான தருணங்களில் அவர் சிறப்பாகப் பந்துவீசினார். நல்ல ஃபார்மில் இருக்கும் அவர், கடந்த சீஸன் முழுவதும் சென்னை அணி வீரர்களின் வலைப்பயிற்சியின்போது பந்துவீசியிருக்கிறார். `மிஸ்ட்ரி’ ஸ்பின்னரான அவர் நிச்சயம் ஒருநாள் சென்னை அணியில் இடம் பிடிப்பார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.  

நன்றி: Madurai Panthers