வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (21/12/2018)

கடைசி தொடர்பு:08:04 (21/12/2018)

பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் - யார் இந்த டபிள்யூ.வி ராமன்?

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த டபிள்யூ.வி ராமன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பிசிசிஐ

இந்திய அணியின் முன்னாள் வீரரான ரமேஷ் பவார், இந்தியப் பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார். கடைசியாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. முக்கிய போட்டியில், மூத்த வீராங்கனை மிதாலி ராஜை அணியில் சேர்க்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு இடையில் மிதாலி ராஜ் ரமேஷ் பவார் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். பதிலுக்கு பவாரும் மிதாலி மீது பல குற்றச்சாட்டுகளை பி.சி.சி.ஐ-க்கு கடிதமாக எழுதினார்.

மிதாலி - பவார்

கடந்த நவம்பர் மாத இறுதியுடன் பவாரின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் பி.சி.சி.ஐ இறங்கியது. ரமேஷ் பவாரே பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என இந்தியப் பெண்கள் அணியின் கேப்டன் கவுர் மற்றும் ஸ்மிரிதி மந்தானா ஆகியோர் கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்தக் கோரிக்கையை பி.சி.சி.ஐ ஏற்கவில்லை.

கவுர் -மந்தானா

இதைத் தொடர்ந்து இந்தியப் பெண்கள் அணிக்கான பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு அதன் இறுதிப்பட்டியல் கபில்தேவ், அன்ஷுமன் மற்றும் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய குழுவுக்கு அனுப்பட்டது. இதில் ரமேஷ் பவாரின் பெயரும் இருந்தது. இந்த மூவர் குழு அனைவரிடமும் நேர்முகத்தேர்வு நடத்தி மூன்று பேர் கொண்டப் புதியப் பட்டியலை பி.சி.சி.ஐ-யின் நிர்வாகக் குழுவுக்கு அனுப்பியது.
 
இதில் முதல் இடத்தில் இருந்தவர் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கேரி கிரிஸ்டன்தான். இவர் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்காகச் செய்துள்ள ஒப்பந்தம் காரணமாக, பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமனுக்கு வாய்ப்பு கிடைத்தது. கேரி கிரிஸ்டன் பெங்களூரு அணிக்குப் பயிற்சியாளராக தொடரவே விருப்பம் தெரிவித்துள்ளார். மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத் பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கேரி கிரிஸ்டன்

இந்தத் தேர்வு தொடர்பாகப் பேசிய அன்ஷுமன்,  ``பட்டியலில் இருந்த அனைவரிடமும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் முக்கியமான கேள்விகளாக, ஏன் பெண்கள் அணிக்குப் பயிற்சியாளராக வர விரும்புகிறீர்கள், இந்திய அணியை முன்னெடுத்துச் செல்ல என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தக் கேள்விகளுக்கான பதிலின் அடிப்படையில் மூன்று பேரை தேர்வு செய்தோம்” என்றார். 

யார் இந்த டபிள்யூ.வி ராமன்?

ராமன்

தமிழகத்தைச் சேர்ந்த டபிள்யூ.வி ராமன், இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல் தரப் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக 7939 ரன்கள் குவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் இவர் பந்துவீச்சிலும் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். 

கிரிக்கெட் வீரராக மட்டும் இல்லாமல், பயிற்சியாளராகவும் அனுபவம் கொண்டவர் டபிள்யூ.வி ராமன். 2005-07 வரை தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்தார். 2001-02 மற்றும் 2010-13 காலகட்டங்களில் பெங்கால் அணிக்குப் பயிற்சியாளராக செயல்பட்டார். 2013-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்கு அசிஸ்டெண்ட் கோச்சாகவும், 2014 -ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு பேட்டிங் ஆலோசகராகவும் இருந்த அனுபவம் கொண்டவர். மேலும், 2015-ம் ஆண்டு முதல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் ஆலோசகராக இருந்து வருகிறார். இந்தக் காலகட்டத்தில் இந்திய ஏ, துலீப் டிராபி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்குப் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். 

ராமன் தலைமையில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி பல்வேறு சாதனைகள் படைக்கும் என அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. நாமும் வாழ்த்தலாம். வாழ்த்துகள் டபிள்யூ.வி ராமன்!