வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (21/12/2018)

கடைசி தொடர்பு:15:06 (21/12/2018)

``நான் செய்த குற்றத்தின் தன்மை இப்போது புரிகிறது!” - தடை நாள்களின் கடினம் பகிரும் ஸ்டீவ் ஸ்மித்

ஒரு மனிதனாக நான் செய்த தவற்றில் இருந்து திருந்த முயன்று வருகிறேன் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். 

ஸ்டீவ் ஸ்மித்

பால் டேம்பரிங் புகாரில் சிக்கி ஓராண்டு தடையில் இருக்கிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். அவரது தடை முடிவடைய இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் மீண்டும் அணிக்குத் திரும்பும் வகையில் உள்ளூர் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக ஜனவரி மாதம் தொடங்கவுள்ள பி.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாள்களில் அணியினருடன் இணையும் முனைப்பில் ஸ்மித் இருந்தார். இந்த நிலையில்தான் ஸ்மித் பி.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கு வங்காள தேசம் கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது. இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

ஸ்மித்

இந்நிலையில் தடை விதிக்கப்பட்டு இத்தனை நாள்களில் ஆஸ்திரேலிய மீடியாக்களை சந்திக்காமல் இருந்த ஸ்மித் இன்று சந்தித்தார். அப்போது, ``எனது செயலால் ஏமாற்றம், கோபம் அடைந்துள்ள சக வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்துள்ளேன். தற்போது நான் செய்த குற்றத்தின் தன்மை புரிகிறது. இது என்னுடைய தலைமைக்கான மிகப்பெரிய தோல்வி. ஒரு மனிதனாக நான் செய்த தவற்றில் இருந்து திருந்த முயன்று வருகிறேன். 

ஸ்மித்

தடை நாள்கள் மிகவும் கடுமையாக இருந்தது. சில நாள்களில் எல்லாம் படுக்கையிலிருந்து வெளி வர முடியாத அளவுக்கு மன இறுக்கம் ஏற்பட்டது. ஆனால், என்னைச் சுற்றி இருந்தவர்கள் அந்த நெருக்கடியிலிருந்து வெளிவர உதவியாக இருந்தார்கள். தடை குறித்து மேல்முறையீடு செய்யும் எண்ணமில்லை. எனக்குத் தெரியும் நான் தவறு செய்துள்ளேன். அதை ஒப்புக்கொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறேன். மக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெறுவதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறேன். 

ஸ்டீவ் ஸ்மித்

photo credit: @cricketcomau

தற்போது சரியான திசையில் செல்வதாக நினைக்கிறேன். மீண்டும் அணியில் இடம்பிடிப்பேன் நம்பிக்கை இருக்கிறது" என்று தெரிவித்தவரிடம் பெர்த் டெஸ்ட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஸ்மித், ``சில போட்டிகளில் அணி மோசமாக விளையாடிய போது வீரர்களுக்கு உதவ முடியவில்லை என வருத்தம் ஏற்பட்டது. ஆனால் பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்களின் விளையாட்டு பெருமைப்பட வைக்கிறது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க