`எங்கள் முயற்சி கோலி - கும்ப்ளே விஷயத்தில் பலனளிக்கவில்லை' - வி.வி.எஸ் லட்சுமண் வருத்தம்! | We wanted Anil Kumble to continue as India coach but he wanted to quit says VVS Laxman

வெளியிடப்பட்ட நேரம்: 08:29 (22/12/2018)

கடைசி தொடர்பு:10:27 (22/12/2018)

`எங்கள் முயற்சி கோலி - கும்ப்ளே விஷயத்தில் பலனளிக்கவில்லை' - வி.வி.எஸ் லட்சுமண் வருத்தம்!

கோலி - கும்ப்ளே இடையிலான மனக் கசப்பு துரதிர்ஷ்டவசமான ஒன்று என முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமண் தெரிவித்துள்ளார்.

கோலி - கும்ப்ளே

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே கடந்த 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது ஓராண்டு பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, கும்ப்ளே கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் ராஜினாமா செய்தார். `கோலிக்கு என்னுடைய பயிற்சி முறைகளில் சில முரண்பாடுகள் இருந்தன' என்று கும்ப்ளே வெளிப்படையாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்திய கிரிக்கெட்டில் இது ஒரு கசப்பான சம்பவமாக இடம்பெற்றுள்ளது. 

வி.வி.எஸ் லட்சுமண்

இந்நிலையில் கோலி - கும்ப்ளே இடையிலான கருத்து வேறுபாடுகள் குறித்து இந்திய அணி ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமண், இந்தியா டுடே நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பேசியுள்ளார். அதில், ``என்னைப் பொறுத்தவரை கோலி இந்த விஷயத்தில் எல்லை மீறி நடந்ததாகத் தெரியவில்லை. ஒரு ஆலோசனைக் குழுவாக கும்ப்ளே இந்திய அணிக்குப் பயிற்சியாளராக தொடர வேண்டும் என நாங்கள் விரும்பினோம். ஆனால் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிவிடலாம் என கும்ப்ளே தீர்க்கமான முடிவில் இருந்தார். அவரின் விலகல் ஒரு மன சங்கடத்தை கொடுத்தது. 

கும்ப்ளே

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது கும்ப்ளேவுக்கு இருந்த அழுத்தம் விரும்பத்தகாதது. அதை நான் சுத்தமாக விரும்பவில்லை. அந்தத் தொடரில் அவர் பயிற்சியாளராக தொடர வேண்டும் என விரும்பினோம். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. ஆலோசனைக் குழு என்றால் திருமணத்துக்கான ஆலோசகர்கள் கிடையாது. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணி  சிறப்பானவர்களை தேர்வு செய்வது தான். துரதிர்ஷ்டவசமாக, இது கோலி - கும்ப்ளே விஷயத்தில் பலனளிக்கவில்லை" என்று கூறினார்.

சச்சின், கங்குலி, வி.வி.எஸ் லட்சுமண் 

கும்ப்ளே 2016ம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் அமரவைக்கப்பட்டதில் ஆலோசனைக் குழுவில் உள்ள சச்சின், கங்குலி, வி.வி.எஸ் லட்சுமண் ஆகியோர் பங்கு முக்கியமானது. ரவி சாஸ்திரி பயிற்சியாளராக வர அதிகமாக வாய்ப்பு இருந்த நிலையில் இந்த மூவர் கூட்டணியால்தான் கும்ப்ளே பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டார் என்று இன்றளவும் கூறப்பட்டு வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க