வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (22/12/2018)

கடைசி தொடர்பு:18:28 (22/12/2018)

`குடும்பத்தின் ஆசியுடன் திருமணம் நடந்தது மகிழ்ச்சி!’ - காதலியைக் கரம்பிடித்த சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கும் அவரது கல்லூரித் தோழியான சாருலாதாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

சஞ்சு

PC : https://www.instagram.com/maritusevents/

கேரள ரஞ்சி அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றார். இளம்வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்ற அவர், கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் இளம் வீரருக்கான விருதையும் பெற்றுள்ளார். 2018-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் 8 கோடி ரூபாய்க்கு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. இதுமட்டுமல்லாமல் அவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 2 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.

ஒருமுறை அவர் பேசுகையில் ``எனது அணி என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறதோ அதைப் பூர்த்திச் செய்வேன். முடியுமளவுக்கு அதிகப் போட்டிகளை வென்று தர முயல்கிறேன். விக்கெட் கீப்பிங், ஃபீல்டிங் என எந்தப் பணியானாலும் எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவேன்'' எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கும், அவரது கல்லூரித் தோழிக்கும் இடையே இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள மார் இவானிஸ் கல்லூரியில் படிக்கும் போது, சாருலதாவும், சஞ்சு சாம்ஸனும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்.

PC : https://www.instagram.com/maritusevents/

நீண்ட நாள் காதலுக்குப் பிறகு, இருவரும் தங்கள் காதலை வீட்டில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இரண்டு தரப்பினரின் வீட்டாரின் சம்மதத்தின் பேரில் சிம்பிளாக சஞ்சு- சாருலதா திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த கோவளத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், நடந்த இந்தத் திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இதில் திருமணம் குறித்து சாம்சன் கூறுகையில், ``எளிமையான முறையில்தான் திருமணம் நடந்தது. இரு தரப்பிலிருந்தும் குறைவான நபர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். இரு குடும்பத்தினர் ஆசியுடன் திருமணம் நடந்து முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.