வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (23/12/2018)

கடைசி தொடர்பு:07:32 (24/12/2018)

`கிரிக்கெட்டின் எல்லா ஃபார்மேட்டிலும் விராட் கோலியால் ஜொலிக்க முடியும்!’ - ராகுல் டிராவிட்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என கிரிக்கெட்டின் அனைத்துவிதமான ஃபார்மேட்டிலும் ஜொலிக்க முடியும் என ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ராகுல் டிராவில் புகழாரம் சூட்டியிருக்கிறார். 

விராட் கோலி

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடர் முடிந்தநிலையில், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வென்றுள்ளதால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் எம்.சி.ஜி மைதானத்தில் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. 

ராகுல் டிராவிட்

இந்த நிலையில், விராட் கோலிக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரரும் இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட். இதுகுறித்து பேசிய டிராவிட், ``கிரிக்கெட்டின் மூன்றுவிதமான ஃபார்மேட்டுகளிலும் வென்ற வீரருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர் விராட் கோலி. அது எளிதல்ல. பெரும்பாலான வீரர்களுக்கு அது சாத்தியமில்லை. ஆனால், கிரிக்கெட் வீரர்கள் மூன்றுவிதமான ஃபார்மேட்டுகளிலும் வெற்றிகரமாக விளங்க வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். 

விராட் கோலி

டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதுதான் உங்களுக்கு ஆத்ம திருப்தியை அளிக்கும் என்று அவர்களிடம் (19 வயதுக்குட்பட்ட இந்திய அணி வீரர்கள்) நான் கூறுவதுண்டு. டெஸ்ட் போட்டிதான், ஒரு வீரரை மனதளவிலும் உடல் அளவில் முழுமையாக சோதிக்கும். ஐந்து நாள்களில் ஒரு வீரரின் திறமையை பல்வேறு வகையிலும் சோதிக்கும் திறன் படைத்தது டெஸ்ட் கிரிக்கெட். எனவே, அதுதான் மிகப்பெரிய சவால். சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், உங்களுக்கானது டெஸ்ட் கிரிக்கெட்தான் என்றும் நான் ஜூனியர் வீரர்களிடம் கூறியிருக்கேன்’’என்றார்.