வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (24/12/2018)

கடைசி தொடர்பு:09:00 (24/12/2018)

விஸ்வரூபமெடுத்த ஜடேஜாவின் ஃபிட்னெஸ் விவகாரம்! - பி.சி.சி.ஐ கொடுத்த நீண்ட விளக்கம்

ஆல்ரவுண்டர் ஜடேஜாவின் உடற்தகுதி குறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளித்திருக்கிறது. 

ஜடேஜா

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடர் முடிவடைந்தநிலையில், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, மெல்போர்ன் எம்.சி.ஜி மைதானத்தில் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஆல்ரவுண்டர் ஜடேஜா குறித்து கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெர்த் டெஸ்டின் பிளேயிங் லெவன் குறித்து பேசுகையில், ``ஆஸ்திரேலியத் தொடருக்கு முன்னதாகவே ஜடேஜாவுக்கு இடது தோள்பட்டையில் பிரச்னை இருந்தது. அதற்காக மருந்து எடுத்துகொள்ள அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. பெர்த் டெஸ்டைப் பொறுத்தவரையில் அவர் 70 முதல் 80 சதவிகிதம் வரை ஃபிட்டாக இருந்தார். அதனால், நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. பாக்ஸிங் டே டெஸ்டின்போது அவர் 80 சதவிகிதம் உடற்தகுதியுடன் இருந்தாலே, பிளேயிங் லெவனில் அவரை சேர்ப்பது குறித்து நாங்கள் பரிசீலிப்போம்’’ என்று கூறியிருந்தார். 

ரவி சாஸ்திரி

இதையடுத்து, டிசம்பர் மாதத் தொடக்கத்திலேயே ரவீந்திர ஜடேஜா காயத்தால் அவதிப்படுவது தெரிந்தும் அவரை ஆஸ்திரேலியத் தொடருக்குத் தேர்வு செய்தது ஏன் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், காயத்தால் அவதிப்படும் வீரர் ஒருவரை பெர்த் டெஸ்டின் 12-வது வீரராக அறிவித்தது குறித்தும் அவர்கள் விமர்சித்திருந்தனர். 

இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவுக்கு ஜடேஜா உடற்தகுதியுடன் இருப்பதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) விளக்கமளித்திருக்கிறது. இதுதொடர்பாக பி.சி.சி.ஐ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ``வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் தொடர்ச்சியாக பந்துவீசிய காரணத்தால், இடது தோள்பட்டைப் பகுதியில் அசாதாரணமாக உணர்வதாக ஆல்ரவுண்டர் ஜடேஜா கூறினார். இதையடுத்து, மருத்துவர்களின் அறிவுரையின்படி மும்பையில் கடந்த நவம்பர் மாதம் 2-ம் தேதி அவருக்கு ஊசி மூலம் மருந்து கொடுக்கப்பட்டது.

பிசிசிஐ

இதன்மூலம் தோள்பட்டை வலியில் இருந்து விடுபட்ட ஜடேஜா, கடந்த நவம்பர் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடினார். எந்தவித பிரச்னையும் இன்றி ஜடேஜா, அந்தப் போட்டியில் 64 ஓவர்கள் வீசினார். இதையடுத்து, ஆஸ்திரேலியத் தொடருக்கு அவர் உடற்தகுதியுடன் இருப்பதாக பி.சி.சி.ஐ அறிவித்தது. பின்னர், கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடனான போட்டியின்போது கடந்த நவம்பர் 30-ம் தேதி, மீண்டும் தனது தோள்பட்டையில் வலியை உணருவதாக ஜடேஜா தெரிவித்தார். இதையடுத்து, மருத்துவக் குழுவின் அறிவுரையின்படி அவருக்கு மீண்டும் மருந்து கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட பயிற்சிகளின் மூலம் வலியிலிருந்து அவர் குணமடைந்து வந்தார். 

ஜடேஜா

பெர்த் டெஸ்ட் நடைபெறும்போது கடந்த டிசம்பர் 14-ம் தேதி வாக்கில், வலைப் பயிற்சியின்போது ஜடேஜா பந்துவீசிய விதம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பின்னரே, பெர்த் டெஸ்டின் பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. தற்போது அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவுக்கு நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.