`நான் செய்தது தவறுதான்!’ - நோ பால் சர்ச்சையில் மன்னிப்புக் கேட்ட வங்கதேச நடுவர் | Bangladesh umpire seeks apology over no ball controversy

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (24/12/2018)

கடைசி தொடர்பு:12:24 (24/12/2018)

`நான் செய்தது தவறுதான்!’ - நோ பால் சர்ச்சையில் மன்னிப்புக் கேட்ட வங்கதேச நடுவர்

வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் தான் தவறுதலாக நோ பால் என்று அறிவித்துவிட்டதாக வங்கதேச நடுவர் தன்வீர் அஹமது மன்னிப்புக் கேட்டிருக்கிறார். 

நடுவர்

photo credit: @HLines24

வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி தாக்காவில் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 191 ரன்கள் இலக்கை நோக்கிக் களமிறங்கிய வங்கதேச அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

இந்தப் போட்டியில் வங்கதேச அணி பேட் செய்துகொண்டிருந்தபோது, அந்த இன்னிங்ஸின் 4வது ஓவரை வெஸ்ட் இண்டீஸின் ஒஷேன் தாமஸ் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை கள நடுவர் தன்வீர் அஹமது நோ - பால் என அறிவித்தார். ஆனால், டி.வி ரீபிளேயில் தாமஸ் வீசியது நோ - பால் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஐ.சி.சி விதிமுறைப்படி நோ பால் என அறிவித்த பின்னர், அதைத் திரும்பப் பெற முடியாது என்பதால், அடுத்த பந்தை ஃப்ரீ ஹிட்டாக அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒஷேன் தாமஸ் வீசிய அடுத்த பந்து சிக்ஸருக்குப் பறந்தது. 

களநடுவரின் தவறான முடிவை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வொய்ட், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மூன்றாவது நடுவர், மேட்ச் ரெஃப்ரி, வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் உள்ளிட்டோர் பிராத்வொயிட்டை சமாதானப்படுத்தினர். இதனால், சிறிது இடைவெளிக்குப் பின்னர் போட்டி தொடங்கியது. 

நடுவர்
photo credit: @HLines24

போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட், கள நடுவர்களின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்ததுடன் இதுபோன்ற சம்பவங்களை நம்பவே முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல், ஒருநாள் தொடரிலும் கள நடுவர்கள் ஒரு அணிக்கு சாதகமாக முடிவெடுத்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுதொடர்பாக மன்னிப்புக் கோரியிருக்கிறார் தன்வீர் அஹமது. 

நோ பால்
photo credit: @HLines24

அந்தத் தொடரில் தான் ஏற்கெனவே சில முறை தவறு இழைத்துள்ளதாகவும் தன்வீர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அவர் கூற்றுப்படி, இரண்டாவது டி20 போட்டியின்போது இன்சைட் எட்ச் ஆகிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஒருவருக்கு எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக அறிவித்ததாகக் கூறியிருக்கிறார். அதேபோல், மூன்றாவது டி20 போட்டியில் ஒஷேன் தாமஸ் வீசிய 4வது ஓவரில் ஏற்கெனவே ஒருமுறை தவறுதலாக நோ-பால் அறிவித்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். 

இதுகுறித்து தன்வீர் அஹமது மேலும் கூறுகையில், `நோ-பால் விவகாரத்தைப் பொறுத்தவரையில் கோடுகள் அருகருகே இருப்பதால், அதைக் கணிப்பதில் தவறு நிகழ வாய்ப்பிருக்கிறது. பந்துவீச்சாளர் வேகமாகக் குதித்து பந்துவீசுகையில், நோ பாலைக் கணிப்பதில் சிரமம் ஏற்படும். சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு நான் புதிது என்பதால், நான் தவறிழைத்துவிட்டேன். அந்த தவறிலிருந்து நான் மீண்டு வருவேன்’ என்று கூறியிருக்கிறார்.