வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (24/12/2018)

கடைசி தொடர்பு:17:26 (24/12/2018)

`மெல்போர்ன்ல டபுள் செஞ்சுரி கன்ஃபார்ம்' - அஜிங்கியா ரஹானே சொல்லும் லாஜிக்!

'மெல்போர்னில் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சதம் அடிப்பேன்' என இந்திய அணியின் பேட்ஸ்மேன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். 

ரஹானே

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நாளை மறுநாள் மெல்போர்னில் நடக்கவிருக்கிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளதால், இரண்டாவது வெற்றி பெறுவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரு போட்டிகளிலும் இந்திய அணியின் ஓப்பனிங் சொதப்பியதால், இந்தப் போட்டியில் ஓப்பனிங்கில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், ஹர்திக் பாண்டியா, மாயங் அகர்வாலின் வருகை அணிக்கு புது தெம்பைக் கொடுத்துள்ளது. இதற்கிடையே, இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே மூன்றாவது போட்டிகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அஜிங்கியா ரஹானே

அப்போது பேசிய அவர், ``முதல் டெஸ்ட்டை விட பெர்த் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் மீண்டு எழுவார்கள் என்று எங்களுக்கு ஏற்கெனவே தெரியும். அதேநேரம், இந்திய அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது. இது முடிந்துபோன விஷயம் என்பதால், இதனைப் பேசி இனி பலனில்லை. தற்போதைய கவனமெல்லாம் பாக்ஸிங் டே டெஸ்ட் நோக்கியே. டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு செஷனிலும் சிறந்த ஆட்டத்தை அளிக்க வேண்டும். 

ரஹானே

photo credit: @somsirsa

அவ்வாறு அளித்தால், அது அணியின் வெற்றிக்கு நல்ல பங்களிப்பைத் தரும். அடுத்த போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் ஆடுவார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால், அந்நிய மண்ணில் இந்திய பௌலர்கள் சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்துகிறார்கள். அப்படி இருக்கும்போது, அவர்களுக்கு உறுதுணையாக நாமும் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி ஆடினால், வெற்றி நம் பக்கமே. அடிலெய்ட், பெர்த் போட்டிகளில் நான் விளையாடியதைப் பார்க்கும்போது, மெல்போர்ன் டெஸ்ட்டில் சதம் அல்லது இரட்டைச் சதம் அடிப்பேன் என நம்புகிறேன். சூழ்நிலையைப் பொறுத்து விளையாடினால் போதும், சாதனைகள் பின்னால் வந்து சேரும். பாக்ஸிங் டே டெஸ்ட், மிகப்பெரிய மைதானம் என்பதால், மெல்போர்னில் விளையாடுவதற்கு உண்மையிலேயே ஆர்வமாக இருக்கிறேன்" என்று கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க